Monday, April 25, 2011

திரிபுக்காட்சி - ஒரு குறுங்கதை = By Vaz "

கண்டிப்பாக இன்று போருக்கு போக வேண்டுமா ...."  தயக்கத்துடன் கேட்ட அரசியை, உக்ரமாக பார்த்தேன்.

"என்ன கயல்விழி, நான் இட்ட கட்டளைகளுக்கு அனைத்து குறுநில மன்னர்களும் தலை வணங்கி விட்டனர்.  அந்த மகேந்திர வர்மன் மட்டும் முரண்டு பிடிக்கிறான்.  பின் இந்த குலோத்துங்கன் வார்த்தைகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது.. இன்று அவன் குருதி நிலத்தில் சிந்தும்."  என்றேன் ஆத்திரத்துடன்.

" பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடித்து கொள்ளலாமே " என்றாள் அரசி.

" அனைத்து வாய் வாக்குகளும் முற்று பெற்று விட்டன.  இன்று கடைசியாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளேன்.  அதற்கு அவன் செவி சாய்க்காவிடில், அவன் குறுநிலம் இருக்காது. அவனும் இருக்க மாட்டான்.  படைகளை தயார் செய்ய கூறி விட்டேன். "  என்ற நான், அவள் தந்த பழ ரசத்தை வேகமாக அருந்தினேன்.

"சரி அரசி. சபை கூடி விட்டது. வருகிறேன். பிள்ளைகளை பார்த்து கொள்."

"சரி மன்னவா, சென்று வாருங்கள்." என்று அரசி வழியனுப்பினாள். 

அந்தபுரத்தை விட்டு வெளியேறினேன்.  காவலர்கள் வேல்கம்புகளை சாய்த்து வணங்கினர்.  அரசவையை நோக்கி நடந்தேன்.

"மன்னர் வருகிறார் பராக் " என உச்ச ஸ்ததியில் சேவகன் கூவ ....   என் உடைவாளை சரி செய்தபடி சபைக்குள் நுழைந்தேன்.

அரசவையில் அமர்திருந்த அனைவரும் அவசரமாக எழுந்து நிற்க,  மிடுக்குடன் என் சிம்மாசனத்தை நோக்கி நடந்தேன் ..

சிம்மாசனம் செல்லும் பாதை முழுதும் சிவப்பு கம்பளம் விரிக்கபற்றிருக்க, இருபுறமும் மாதர்கள் மலர்கள் தூவினர்.  நடைபாதையை புஷ்பங்கள் நிறைத்திருந்தன ...

இருபுறமும் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள், மற்றும் போர்ப்படை தளபதிகள் அனைவரும் பய்வமாக எழுந்து நின்றனர்.

அனைவரையும் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு என் அரியணையை நெருங்கினேன்.

இருபுறமும் இருந்து "வணக்கம் மன்னவா " " வந்தனம் மன்னர் மன்னா" என வாழ்த்து குரல்கள் எழும்பிய வண்ணம் இருந்தன.

படிகளில் ஏறி அரியணையில் அமர்ந்தேன்.    இருபுறமும் சாமரங்களை  வீசியபடி பெண்கள்....

என் நம்பிக்கைக்கு பாத்திரமான அமைச்சர் பொற்கொற்றனார் என்னை வணங்கி அருகில் வந்தார்.

"அமைச்சரே, இன்று என்ன செய்தி? நாட்டு மக்கள் நலமுடன் உள்ளார்களா?  போர்களத்தில் இருந்து என்ன தகவல் உள்ளது? " என வினவினேன்.

"மன்னர் மன்னா, அரசன் மகேந்திர வர்மன் தங்கள் கட்டளைக்கு அடிபணிய மறுக்கிறான்.  நம் நாட்டு எல்லையில் முப்படைகளை குவித்துள்ளான்.
போர் மூளும் அபாயம் உள்ளது.  ஆகையால், மக்கள் பீதியுடன் இருக்கின்றனர்."

என் விழிகள் கோபத்தில் சிவக்க "என்ன ஒரு தைரியம் அவனுக்கு. என்னையே எதிர்க்க திராணி வந்து விட்டதா?  இன்று அவன் தலை தலையில் உருளும். அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.  கூப்பிடுங்கள் தளபதியை" என்று இரைந்தேன்.

"வந்து விட்டேன் மன்னா, " என்று பணிந்தவாறே வந்தான் முப்படை தளபதி இளஞ்செழியன்.

"படைகள் தயார் நிலையில் உள்ளனவா?"

"ஆம் மன்னா.  உங்கள் குறிப்பறிந்து போர்வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் "

"வாருங்கள்.  படைகளை ஆய்வு செய்வோம் " என எழுந்தேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போர்க்களம்.

புழுதியை கிளப்பியபடி எங்கள் புரவிகள் நுழைந்து, கனைத்தபடி கால்களை உயர்த்தி நின்றன.   நானும் தளபதியும் இறங்கி கம்பீரமாக நடந்தோம் வீரர்களை நோக்கி.

எங்கள் வருகையை கண்ட போர்வீரர்கள் அனைவரும் விரைப்பாகினர்.   கவசம் அணிந்து வேல்கம்பு மற்றும் போர்வாள் ஆகியவற்றை இறுக்கமாக பிடித்தபடி நெஞ்சை நிமிர்த்தியபடி உறுதியாக நின்றனர்.  ஒருபுறம் குதிரைகளின் மேல் வீரர்கள், இன்னொரு புறம் யானை படை என கண்ணுக்கெட்டிய தூரம் வரை என் படை தெரிந்தது.

"மன்னா, 750 வாரணங்கள், 500 குதிரைகள், தரைப்படை வீரர்கள் என எண்ணிக்கை பல ஆயிரம். வெற்றி நமதே " என்றான் தளபதி.

"நல்லது தளபதி. நமது போர் தந்திரங்களை நன்றாக கற்பித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்"

"ஆம் மன்னா.  அனைவரும் எதிரியை தோற்கடிப்பதில் முனைப்புடன் உள்ளனர்."

"நன்று நன்று.  எனது கவசத்தை அணிந்து விடுங்கள் " என கூறி என் கைகளை விரிக்க, என் பின்னே வந்து ஒரு சேவகன் மார்புக்கவசத்தை மாடி விட்டான்.  என் போர்வாளை ஒரு முறை சரி பார்த்து கொண்டேன்.

"என் புரவியை கொண்டு வாருங்கள்"  என கட்டளை இட்டேன்.

குளம்போசையுடன் என் வெண்ணிற புரவியான மின்னல் வந்தது.

ஒரு படை வீரன், புரவியை பிடித்து கொள்ள, அதனை நோக்கி நடந்தேன் ... அப்பொழுது ...

படை வீரர்களுக்கு நடுவில் இருந்து ஒருவன், வெள்ளை நிற உடை அணிந்து தனியாக தெரிந்தான், அவன் கையில் ஒரு கொம்பு இருந்தது.. அவன் திடீர் என அதை சுழற்றிய படி என்னை நோக்கி வர...

"யார் இவன்.. தளபதி என்ன இது.. அவனை பிடியுங்கள்.  அவன் என்னை கொல்ல வரும் ஒற்றன்" என இறைந்தேன்.

தளபதி மற்றும் வீரர்கள் சிலை போல நிற்க, அவன் என்னை நெருங்கி , அந்த கொம்பால் என் கால்களில் வேகமாக தாக்கினான்.

"ஆஆஆஆ"  என் உலகில் இருள் சூழ்ந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"யோவ் வேலு, ஏன்யா அந்த பெருச போட்டு இந்த அடி அடிக்ற, மண்டைய போட்ற போதுபா"

"அட போய்யா. நேத்து அட்மிட் ஆன கேசுப்பா.  ஜெனரல் வார்டுல போட்டுருகானுங்க.  அதுக்கு ஏதோ ராசான்னு நினைப்பு ..  ஆ ஊன்னா சண்டைக்கு போறேன், குதிரைல ஏறுறேன்னு வார்ட்ட வுட்டு ஓடி போய்டுது. அதான் நல்லா ஒன்னு வச்சேன்.  யப்பா, இந்த மறை கழண்ட கேஸ்களோட ஒரே பேஜாருப்பா.  சீக்ரம் வேற வேலைய பாக்கணும். சரி  சரி, க்வாட்டருக்கு காசு இருக்குள்ள.. "

பேசியபடி நடந்தனர் அந்த மன நல காப்பகத்தின் காவலாளிகள்.

END _____________________________________

குறிப்பு:

(திருபுக்காட்சி என்பது delusion  என்ற ஆங்கில வார்த்தைக்குரிய தமிழ் சொல்.  அதை தெரிந்தவர்கள் உடனே கதையின் முடிவை கண்டிருக்கலாம்!  Schizophrenia எனும் மனச்சிதைவு நோயின் ஒரு கட்டத்தில் சில நோயாளிகளுக்கு grandiose delusional disorder எனும் ஒரு நோய்க்குறி வருவது உண்டு. அதை சிறிது திரித்து கற்பனை கலந்த முயற்சி இது!).  மேலும் அறிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.  http://www.webmd.com/schizophrenia/guide/delusional-disorder.