கி பி 3011.
அந்த 500 அடுக்கு மாடி கட்டிடத்தின் 345 எண் வீட்டில் உள்ள வரவேற்பறையில் அமர்திருந்தான் ரீவா, அருகில் அவன் தங்கை மகி....
எதிரே 100 அடி சதுர நீர்ம படிக ஒளிக்காட்சி திரையில் விளம்பரங்கள் ஓடி கொண்டிருந்தன .....
" வியாழன் கோளில் சுற்றுலாவிற்கான கட்டணம் 30 % குறைப்பு ..." " புதிய 100000 கிகா எண்பிட்டு கொள்ளடக்க தகடுகள் அறிமுகம் "
ஆனால் அதில் மனம் லயிக்காமல் யோசனையில் ஆழ்த்திருந்தான் ரீவா...
அருகில் மகி நிகழ் பட கருவியின் தொடு திரையில் எதையோ அழுத்தி கொண்டிருந்தாள்.
மின்னணு நாய்க்குட்டி பொம்மை ஒன்று அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தது.
"போகலாம் .. நான் தயார்" என்று குரல் கேட்டது ... ரீவா எழுந்து திரும்பி பார்க்க.
அவன் தந்தை மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் ...
"அப்பா " என்று தயங்கி பேசினான் ரீவா.
"ஊர்திக்கு சொல்லி விட்டாயா ரீவா ".... தந்தை வினவ
"ஆயிற்று .. இதோ வந்து விடும் "....
"அப்பா " என்று மகி எழுந்து அவரை கட்டி கொண்டாள்..
"சரி மகி நான் வருகிறேன் .. " அவளை நெற்றியில் முத்தமிட்டு விலக்கினார் தந்தை.. அவள் கண்களில் நீர் கோர்த்து .. "பார்த்து செல்லுங்கள் அப்பா" என்றாள்.
நாய்க்குட்டி தன் உலோக வாலை சுழற்றி "பௌ" என்றது ...
தந்தை அதை பார்த்து கை அசைத்தார் .. "வருகிறேன் நீரோ "
வெளியே குழல் ஊது சப்தம் ஒலிக்க..
ரீவா "ஊர்தி வந்து விட்டது அப்பா " என்றான்.
தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் கதவுகள் பிளந்து கொள்ள ..
முட்டை வடிவ பறக்கும் ஊர்தி நின்று கொண்டிருந்தது .. ஓட்டுனர் உள்ளே ஒரு விசையை இழுக்க.. கதவுகள் திறந்து பறவை போல் விரிந்து நின்றது.
தந்தை திரும்பி வீட்டை சுற்றில் ஒரு முறை பார்த்து விட்டு .. வாகனத்திற்குள் ஏறி அமர்ந்தாள் ..... கூடவே ரீவாவும் அமர்ந்தான் ...
"எங்கு செல்ல வேண்டும் " வினவினான் ஓட்டுனர்.
"அரசாங்க கட்டிட எண் 887 " என்று ரீவா பதில் அளித்தான்.
ஓட்டுனர் தொடு திரையில் எண்களை பதிக்க ... கதவுகள் மூடி கொண்டு ... குளிர் சாதனம் இயங்கதொடங்கியது.... கண்ணாடி கதவில் மகி மற்றும் நீரோ நின்றது தெரிய.. கை அசைத்தார் தந்தை.. கை மற்றும் வால் பதிலுக்கு அசைவது தெரிந்தது ...மெல்லிய உறுமலுடன் அந்த காற்றழுத்த வாகனம் வட்டம் அடித்து கிளம்பியது..
விண்ணை முட்டும் கட்டிடங்கள் ஊடொளி பிம்பங்களின் ஒளியில் பிரம்மாண்டமாக நின்றன.. முழுமைப் படிம உருவங்கள் விளம்பரங்கள் மற்றும் அரசாங்க விதிகளை பறைசாற்றிகொண்டிருந்தன. பல வடிவுகளில் மற்றும் பறக்கும் அளவுகளில் வாகனங்கள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. ஓட்டுனர் அதற்கிடையில் லாவகமாக வளைத்து ஓட்டினான்.
"ரீவா"
"என்ன அப்பா "
"மகியை நன்றாக பார்த்துகொள். அவள் விரும்பும் படிப்பு எந்த கோளில் இருந்தாலும் சேர்த்து விடு. நீயும் இந்த வேலை விட்டு வேறு கோள்களில் ஏதும் கிடைகிறதா என்று பார்"
"நல்லது "
"அரசாங்க திருமண பதிவில் உன் எண் முதல் 100குள் வந்து விட்டது.. கூடிய விரைவில் அழைப்பு வரும். உனக்கு ஒதுக்கப்படும் பெண்ணை திருமணம் செய்து கொள் "
"சரி .. செய்து கொள்கிறேன்"
" நீரோ விற்கு தினமும் மின்னூட்டம் ஏற்ற வேண்டும். மறந்து விடாதே "
"கண்டிப்பாக " என்றான் ரீவா .
லேசான குலுங்கலுடன் ஊர்தி அந்த கருப்பு நிற கட்டிடத்தின் முன் நின்று .. அதன் அகன்ற வாயிலில் தன் கதவுகளை பொருத்தி கொண்டது ..அதன் முகப்பில் ஒளிரிய பிம்பங்களால் அரசாங்க கட்டிட எண் 887 என பிரும்மாண்டமாக மின்னியது.
"வந்து விட்டது " என்றான் ஓட்டுனர்.
ரீவா தன் அடையாள மின்னட்டையை அவன் நீட்டிய கருவியில் தேய்த்து பயணத்திற்கு பணம் செலுத்தினான். கதவுகள் பிளக்க, பின் இருவரும் இறங்கி அந்த கட்டிட வாயிலை நோக்கி நடந்தனர். மிக பெரிய கதவு அவர்களை எதிர்கொண்டது. அதன் முன் இரு சிப்பந்திகள் அரசாங்க உடையான வெளிர் பச்சை சீருடை அணிந்து நின்றனர். இருவரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு .. இருவரின் உடல்களில் அகச்சிவப்பு கருவியால் சோதனை நடத்தினர். பின் ஒரு விசையை இழுத்தவுடன் அந்த கதவு திறந்துகொண்டது. "போகலாம் " என்றான் ஒருவன்.
உள்ளே ... நீண்ட வெண் கற்களால் பதித்த நடைபாதை .. அதன் முடிவில் ஒரு அகலமான மேஜை .. அதன் மேல் ஒரு கணினி மற்றும் அருகில் ஒரு கன்னி..
இருவரும் அதை நோக்கி நடந்தனர்.
அந்த பெண் எழுந்து நிற்க, கழுத்தில் வெண் தங்க மாலை மின்னியது
" வலிக்குமோ " பொதுவாக கேட்டார் தந்தை.
ரீவா பதில் சொல்லவில்லை.
அந்த பெண்ணை நெருங்கியவுடன். அவள் எழுந்து இயந்திரத்தனமாக ...
"உங்கள் சமுக பிணைய எண் ?" என்றாள்..
"889899768504 -௪௫௬" என்று கூற ....
கணினி தொடு திரையில் வேகமாக அதை பதிவு செய்தாள்.
"உங்கள் பிறந்த நாள் "
" 11-12-2061"
"சரி" என்று அந்த பெண் தன் காதில் பொருத்தியிருந்த அலைபேசியில் எதோ பேசிவிட்டு ..
"அறை எண் 4589 " என்றாள் அதே இயந்திர தன்மை மாறாமல். ..
" தளம் 45"
இருவரும் அங்கிருந்த தானியங்கி உயர்த்தியை நோக்கி சென்று ...உள்ளே ஏறி 4589 ஐ அழுத்தினர் ... மின்னல் வேக உயர்த்தி ஆனதால் சில நொடிகளில் அவர்களை 45 எண் தளத்தில் இறக்கியது ...
வெண்ணிற சுவர்கள் இருபுறமும் உயர்ந்து நிற்க ...இடுப்பு உயர இயந்திர சிப்பந்திகள் அங்கும் இங்கும் சுற்றிகொண்டிருந்தன .... அவற்றில் ஒன்றை நிறுத்தி "4589 அறை " என்று கேட்டான் ரீவா. தன் இரும்பு கரத்தால் ஒரு அறையை நோக்கி காட்டியது அந்த சதுர வடிவ இயந்திர சிப்பந்தி.
தந்தையும் ரீவாவும் அந்த அறையை அடைந்தனர். தானியங்கி கதவுகள் திறந்து கொள்ள. .. உள்ளே ..
இரு வெள்ளை உடை அணிந்த மனிதர்கள் அவர்களை "வாருங்கள் " என கூறினார்.
"இவர்தான் பிரஜையா?"
"ஆமாம் " என்றார் தந்தை.
"முன்னே வாருங்கள் " என சொல்லி அவரை அழைத்து சென்று ஒரு சிறிய மேடை மீது ஏற்றி. .. ஒரு அகச்சிவப்பு கோலினால் உடலை அளந்தனர்.
"மருத்துவ பரிசோதனை யாவும் முடிந்து விட்டதல்லவா "
"நேற்றே முடிந்து . .. அரசாங்க தகவல் தளத்தில் ஏற்றப்பட்டுவிட்டன " என்றார் தந்தை.
"நல்லது.. அப்பொழுது நாம் செல்ல வேண்டியதுதான் பாக்கி " என்றான் அவன் ...
"சரி ஒரு நிமிடம் " என்று ரீவா நோக்கி வந்த தந்தை..
அவனை ஒரு நிமிடம் கட்டி பிடித்து விட்டு .. "வருகிறேன் ரீவா.. "
"சரி அப்பா... " என்ற ரீவா வின் கண்களில் நீர் தளும்பியது .
கூட வந்த இரு நபர்களும் தந்தையின் கையை பிடித்து அழைத்து சென்றனர்.. ..சில படிகளில் ஏற, மற்றொரு மூடப்பட்ட அறை இருந்தது அறை இருந்தது.. உள்ளே சென்று மூவரும் மறைந்தனர்.. தந்தை திரும்பி கை அசைத்தார் .. கதவுகள் மூடி கொள்ள.......
ரீவா அருகில் இருந்த மெத்திருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.
பல நிமிடங்கள் உருண்ட பின்பு..
அந்த அறை கதவுகள் திறந்து கொள்ள..
ரீவா எழுந்து நின்றான்.
அந்த இரு நபர்களும் ரீவாவை நோக்கி வந்தனர். ஒருவன் கையில் கருநீல நிறத்தில் பளிங்கினால் ஆன சதுர வடிவ சிறிய பெட்டி இருந்தது .... அதில் தந்தை முகம் பொறிக்கப்பட்டு கீழே 889899768504 -௪௫௬ எண் பொறிக்கப்பட்டு இருந்தது.
"இந்தாருங்கள், கீழே வரவேற்பில் கையொப்பம் பதித்து விட்டு செல்லுங்கள் " என்ற சிப்பந்தி அதை ரீவாவிடம் நீட்டினான்..
"சரி " என்ற ரீவா அதை நடுங்கும் கைகளுடன் வாங்கி கொண்டான்.
உயர்த்தியில் கீழே இறங்கி கையை தொடு திரையில் பதித்து விட்டு மெதுவாக திரும்பி நடந்த ரீவாவின் கண்கள் கட்டிடத்தின் உச்சியில் ஒளிரியம் ஒளியில் ஓடிகொண்டிருந்த அந்த எழுத்துக்களை தன்னிச்சையாக வாசித்தன...
" 2095 உயிர் நீட்பு சட்டம் : அரசாங்க பிரஜைகள் 50 வயதுக்கு மேல் நீடிக்க அனுமதி இல்லை. .. உயிர் வாழும் தகுதி இழக்க பெறுவர்"
தந்தையின் சாம்பலுடன் இயந்திர வாழ்க்கையை நோக்கி திரும்பினான் ரீவா.
=========================== முடிவு? +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Glossary
முழுமைப் படிம Hologram
நிகழ் பட video
நீர்ம படிக ஒளிக்காட்சி LCD
ஊடொளி laser
மின்னூட்டம் charge
ஒளிரியம் neon
அகச்சிவப்பு infrared
சமுக பிணைய social network
உயர்த்தி elevator/lift
வெண் தங்கம் platinum
தகவல் தளம் database
மெத்திருக்கை sofa
கொள்ளடக்க தகடுகள் memory disks
எண்பிட்டு byte
==========================================================