சின்ராசுக்கு அன்று பள்ளிக்கூடம் விடும்போதே தோன்றி விட்டது, இன்று சாயங்காலம் அந்த சம்பவம் நடந்துவிடும் என்று.
" கருப்பு சாமீ .... இன்னைக்கு பார்த்து அது ஆயிட கூடாது ... இன்னும் கொஞ்சம் தள்ளி போடு. .. கோயிலுக்கு வந்து ஒரு எலுமிச்சை பழம் வாங்கி வைக்கிறேன் " என்று அவனுக்குரிய வட்டத்தில் வேண்டி கொண்டான் .
பள்ளிகூட மணி அடித்து. எட்டாம் வகுப்பு அரை நிக்கர் போட்ட பசங்கள் எல்லாம் "ஹோய்" என கூச்சலோடு தத்தம் பைகளை தூக்கிகொண்டு புழுதி கிளப்பிக்கொண்டு ஓடினர். சின்ராசு இயல்பாகவே யாரிடமும் அவ்வளவாக பேசி கொள்ள மாட்டான். அந்த வகுப்பில் வேடிக்கை விளையாட்டு எல்லாமே சின்ராசிடம்தான் நடக்கும். ஓடும்போது கால் சட்டையை இழுத்து விடுவார்கள். பல்லியை எடுத்து மேலே போட்டு விடுவார்கள். நோட்டு புத்தகத்தை ஒளித்து வைத்து விளையாடுவார்கள். அதனால் வகுப்பிற்கு வரவே மிகவும் பயப்படுவான் ராசு.
"டேய் ராசு. உன்ன கூட்டிட்டு போக உன் மாமா மோட்டருல வந்திருக்காருடா" என கத்தினான் ஒரு பையன்.
ராசுவிற்கு பகீர் என்றது.
எப்போதும் குதிரை வண்டியில் பக்கத்து தெரு பசங்கள் ஐந்து பேருடன் தான் போவான் ராசு.
தயக்கமாக பள்ளியின் இரும்பு கதவை விட்டு வெளியே வந்து பார்த்தான்.
மோட்டார் பைக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த அவன் மாமா அவனை கண்டதும் "ராசு, வாடா, சீக்கிரம் போலாம். எல்லாரும் உன்ன பார்த்திட்டு இருக்காக.... வா .. பாட்டிக்கு ரொம்ப உடம்புக்கு முடியலடா"
ராசுவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. "ஐயோ .. இன்னைக்கு பேய் கிழவிய பார்த்து தான் தீரணும் போல..." என மனதுக்குள் ஓடியது.
அவன் மோட்டாரில் ஏறி அமர்ந்து வீட்டுக்கு போவதற்குள் ....
அவன் பயத்துக்குரிய காரணத்தை பார்த்து விடுவோம்..
======================================================
ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பண்ணை வீட்டில்தான் ராசுவின் குடும்பம் வசித்து வந்தது .. ராசுவின் தந்தை கதிர்வேலு விவசாயம் பார்த்து வந்தார். அம்மா கலைவாணிக்கு வீடு மட்டுமே உலகம் . அவர்களின் ஒரே மகன் ராசு. அந்த வீட்டில் இன்னொரு நபரும் இருக்கிறார்.
அந்த நான்காவது நபர்தான் சொர்ணா பாட்டி.... அவளுக்கு ஊர் வைத்த பெயர் ......... "பேய் கிழவி "!
சொர்ணா பாட்டி அவள் சின்ன வயதில் இருந்தே மந்திர தந்திரங்களைக் கற்று வளர்ந்தவள்.
ஊரில் எதாவது பொருள் காணமல் போனாலோ .. அல்லது யாருக்காவது செய்வினை செய்ய வேண்டும் என்றாலோ ... அல்லது செய்வினை எடுக்க வேண்டும் என்றாலோ .. அவளிடம்தான் வருவார்கள் ஊர் மக்கள். ஆனால் பாட்டி மீது எல்லோருக்கும் பயம் இருந்தது. .. பில்லி சூன்யம் மற்றும் மாந்திரிக கலைகளை கேரளம் சென்று கற்று வந்தவள் என்று மக்கள் கூறுவார்கள்...
ராசுவிற்கு சின்ன வயசில் இருந்தே கிழவி என்றால் பயம். அவளுக்கு பார்வை வேறு கிடையாது என்று கூறுவார்கள். கிழவி வீட்டின் மேலே இருக்கும் ஒரு அறையில் தான் இருப்பாள். மாடிக்கு செல்லும் படிகள் தனியாக இருந்தன. கிழவியை பார்க்க வருபவர்கள் அந்த வழியாகதான் மேல சென்று பார்த்துவிட்டு வருவார்கள். கிழவி கீழ வர மாட்டாள். சாப்பாடு கூட ராசுவின் அம்மா போய் வைத்து விட்டு வந்துவிடுவாள். அவளும் மாடிக்கு பயந்து பயந்துதான் போவாள் .
கதிர்வேலுவிற்கு கிழவி செய்யும் காரியங்கள் துளி கூட இஷ்டம் இல்லை. ஆனால் வீடு மற்றும் அவர் விவசாயம் செய்யும் வயல் முதல்கொண்டு அவள் பெயரில் இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாமல் போனால் போகுது என்று விட்டு விட்டார்.
ராசு இதுவரை இரண்டு முறை தான் பாட்டியை பார்த்திருக்கிறான்... நினைவு தெரியாத சின்ன வயதில் .. பின்பு அவன் ஆறாவது படிக்கும்பொழுது ஒரு முறை...அது எப்படி என்றால்,
கிழவி ஏன் கீழே வர மாட்டேன் என்கிறாள் என்று ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு பயம் கலந்த ஆர்வம் இருந்தது.. அதுவும் பள்ளிகூடத்தில் வேறு "டே ராசு.. பேய் கிழவி என்னடா பண்ணுது.." "டேய்.. உனக்கும் மந்திரம் தெரியுமா " என்று அவனை கேலி செய்வார்கள்.
ஆதனால் எப்படியும் கிழவியை பார்த்து விட வேண்டும் என்று ஒரு நாள் அம்மா சாப்பாடு கொண்டு செல்லும் வரை பொறுத்து இருந்தான். அவள் கீழே வந்தவுடன் ... மெதுவாக மாடி படிகளை ஏறினேன்.. பழைய கால சிமெண்ட் படிகள் .. அங்கும் இங்கும் பெயர்ந்து இருக்க,.. கவனமாக ஏறி.. மேலே இருக்கும் குட்டிசுவருக்கு கீழே ஒளிந்து கொண்டு மெதுவாக எட்டி பார்த்தான். மாடியில் ஒரு ஒற்றை அறை மற்றும் இருந்தது.. கதவு பூட்டி இருக்க .. வெளிய தட்டில் சாப்பாடு மூடப்பட்டு ஒரு சிறிய முக்காலியில் வைக்கப்பட்டு இருந்தது.
கதவு மெதுவாக திறந்தது..
கிழவி வெளிய வந்தாள்.
சின்ராசுவின் நெஞ்சு பட பட என அடித்தது....
சிகப்பு நிற சேலையில் குள்ளமாக கருப்பு நிறத்தில் இருந்தாள்.. தலை முடி பஞ்சு போல வெளுத்து தொங்க.. முகத்தில் ஒரு பெரிய குங்கும பொட்டு வைத்து..
அந்த முகம் ..
முகம் முழுக்க அம்மை தழும்புகளுடன் தோல் சுருங்கி போய் விகாரமாக இருக்க, கண்கள் இரண்டும் கருவிழிகள் தெரியாமல் முழுதும் வெள்ளையாக இருந்தன.
ராசுவின் இதயமே நின்று விடும் போல இருந்தது.....கத்தாமல் இருப்பதற்காக கைகளை வைத்து வாயை இறுக்கமாக பொத்தி கொண்டான் ...
அதன் பிறகு ராசுவிற்கு மூன்று நாட்கள் குளிர் ஜுரம் வந்து விட்டது. பின்பு பல நாட்கள் அவன் தூங்கவே இல்லை. கண்ணை மூடினால் கிழவியின் அந்த கோரமான முகம் தன ஞாபகம் வந்தது.. அப்டியே தூங்கினாலும் பேய் கிழவி வந்து சிரிப்பது போலவும் .. அவனை எங்கயோ கூட்டிக்கொண்டு போவது போலவும் கொடுரமான கனவுகள் வந்தன..
அதன் பின்பு அவனுக்கு கருப்பு கோவிலுக்கு சென்று மந்திரித்து விட்டார்கள். பிறகு சில நாட்களில் இயல்பு நிலைக்கு மாறிவிட்டன.
அதன் பின்பு ஒரு வருடம் முன்பு .....
ஒரு நாள் அம்மா அப்பா பேசுவதை ஒளிந்து நின்று கேட்டான்.
"என்னங்க, இந்த கிழவி என்னமோ புதுசா ஏதோ பூசை பண்ண போகுதமா? 13 அம்மாவசை பண்ணுதுன்னு ஏதோ சொல்றாங்க.. என்னங்க இது.. இதுக்கு முடிவே கிடையாதா.. எம்புட்டு நாளு இந்த கொடுமைய அனுபவிக்கணும்.. மண்டைய போடா மாட்டேங்குதே"
"இல்ல கலை.. என்ன பண்ண... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. எப்படியும் நல்லது நடக்கும்.. அதுவரைக்கும் அனுபவிச்சுதான் ஆகணும். ஆத்தாக்காரி ஆகி போச்சே.. ..சொத்து வேற அது பேர்ல தான் இருக்கு.." இயலாமையில் பேசினார் கதிர்வேலு.
அதன் பிறகு விசித்திரமான சில நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.
இரவில் ராசு அப்பா அம்மாவுடன் தான் படுத்திருப்பான். அவர்கள் இருவரும் களைப்பில் சீக்கிரமே உறங்கி விடுவர். ராசு மேலே கூரையை பார்த்துக்கொண்டே பயத்துடன் படுத்திருப்பான்.. தூக்கம் வராமல் புரளுவான்... சரியாக அந்த கூரை மேலேதான் கிழவியின் அறை.
ஒரு நாள் (மூன்று மதங்களுக்கு முன்பு).
வழக்கம் போல விழித்துக்கொண்டு படுத்திருந்தான் ராசு. அப்பொழுது மாடியில் ஒரு சப்தம் கேட்டது..
தம் தம் தம் .......
காதை கூர்மை ஆக்கி கொண்டு ராசு கேட்க
யாரோ வட்டம் அடித்து ஓடுவது போல அந்த சப்தம் சுற்றி சுற்றி வந்ததது..
ராசு போர்வையில் முகத்தின் மேல போர்த்திக்கொண்டு நடுக்கமாக படுத்துக்கொண்டான்..
ஜல் ஜல் என சலங்கை ஓசை வேறு கேட்க..
ராசு அப்பாவை எழுப்ப பார்க்க.. அவரோ இருந்த களைப்பில் குறட்டை விட்டு தூங்கிகொண்டிருந்தார்..
பின் கிழவி ஏதோ மந்திரம் சொல்வது போல குரல் எழுந்தது..
அதன் பிறகு ரத்தத்தை உறைய செய்யும் ஒரு சிரிப்பொலி கேட்டது ...ஆணா பெண்ணா என இனம் பிரிக்க முடியாத ஒரு குரல்.
ராசுவிற்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. ராசு அன்று தூங்கவே இல்லை..
பின் வரும் இரவுகளில் அந்த நிகழ்வுகள் இன்னும் மோசமாக ஆரம்பித்தது..
வினோதமான சப்தங்களும், உறுமல்களும் அழுகுரல்களும் கேட்டு கொண்டே இருந்தன.
ராசு அம்மா அப்பாவிடம் அதை பற்றி கூறியும், அவர்களால் ஒன்று செய்ய இயலாமல் தவித்தார்கள்.
பின்பு ஒரு நாள் திடீர் என சப்தம் கேட்பது நின்று போக ... அமைதியாக கழிந்தன சில இரவுகள்.
அடுத்த நாள் அப்பா அம்மாவிடம் சொல்லுவதை கேட்க நேர்ந்தது சின்ராசுவிற்கு,,,,
"கலை.. கிழவிக்கு ரொம்ப உடம்பு முடியல .. படுத்துட்டே இருக்கு.. "
"ஆமாங்க.. நான் போய் வச்ச சோறு கூட அப்படியே இருக்கு.. உள்ள போக பயமா இருக்கு. "
"நான் போய் பாத்துட்டு வந்தேன்.. பேச முடில.. வைத்தியர கூட்டீயறேன் புள்ள ..."
கதிர்வேலு சைக்கிளில் சென்று வைத்தியரை கூட்டி வர. இருவரும் மேலே செல்வதை ஒளிந்து இருந்து பார்த்தான் ராசு.
பின் சிறிது நேரம் கழித்து வைத்தியரும் அவன் அப்பாவும் அம்மாவும் பேசுவதை கேட்டான்..
"ரெண்டு மூணு நாளுக்கு மேல தாங்காதுங்க ..சொல்றவங்களுக்கு சொல்லிடுங்க. " என்றார் வைத்தியர்..
அவர் போன பிறகு...
"கலை.. என்ன பண்ணலாம்? கிழவி போய்டும் போல இருக்கு."
"அப்பாடி.. நான் கும்புடுற தெய்வம் கை விடல.. நம்ம பட்ட கஷ்டமெல்லாம் போகட்டும்.. நிம்மதியா போய் சேரட்டும் .. ஊருக்குள்ள போக முடில...வீட்டுக்கு கூட யாரும் வர பயப்படறாங்க...."
" ம்ம் என்ன பண்ண .. எனக்கு சந்தோசமாவும் இருக்கு .. ஆனா பெத்துபோட்ட கிழவி ஆச்சே.. அதன் கொஞ்சம் கலக்கம்.. "
ராசுவிற்கு இதை கேட்டதும் மிகவும் சந்தோசமாக இருந்தது.
"சரி அப்போ நம்ம சனத்துக்கெல்லாம் சொல்லிரலாமா..." கேட்டாள் கலை.
"எவன் வருவான் வீட்டுக்கு? கிழவி செத்தாலும் யாரும் வர மாட்டாங்க. அப்படி பயப்படுத்தி வச்சிருக்கு. உன் தம்பி குடும்பம் மட்டும்தான் நமக்கு இப்போதைக்கு சொந்தம். அவங்ககிட்ட சொல்லிடு. " என்றார் கதிர்வேலு.
"அம்மாடி .. பேய் கிழவி தொல்லை ஒரு வழியா ஒழிஞ்சுடும் போல இருக்கு" என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அந்த அதிர்ச்சி நடந்தது.
கதிர்வேலு "ஆனா பாரு கலை.. கிழவி கீழ வந்ததே இல்ல.. ராசு பொறந்ததுல இருந்து அவன ஒரு தடவதான் தூக்கி பாத்திருக்கு.. ஆனா ராசு ராசு ன்னு மட்டும் முனங்குது ..சாகறதுக்கு முன்னாடி ஏதோ சொல்ல நினைக்குது போல.. " என்றார்..
" ஏங்க.. ஏற்கனவே அவன் அத பார்த்துட்டு பயந்து போய் இருக்கான் .. வேணாங்க... "
"இல்ல கலை.. கடைசியா கேட்டுச்சுன்னு வைய்யு. அத நிறைவேத்தாம விட்டோம்னா... கிழவி சாபம் விட்டாலும் விட்டுடும்.. எதுக்கு வம்பு. "
ராசுவிற்கு இதயம் ஒரு முறை நின்று துடித்தது..
"ஐயோ.. இன்னொரு தடவை அந்த கிழவி முகத்தை பாத்துபுட்டா அம்புட்டுதான். இனி தூங்கவே முடியாதே. சாமி.தயவு செஞ்சு நான் பள்ளிகொடம் போகும்போதே கிழவிய கூட்டிகிட்டு போய்டப்பா.." என வேண்டி கொண்டான்.
அடுத்த இரண்டு நாட்கள் தப்பித்து விட்டான்.
அதற்கு அடுத்த நாள்...
================================================
மோட்டாரில் போகும்போது ராசுவின் மனம் திடுக் திடுக் என அடித்துகொண்டது. "ஐயோ சாமி . என் கூட இருந்து காப்பாத்து" என மனமுருக வேண்டிகொண்டான்.
தட தட என குலுங்கி சென்ற வண்டி அவன் வீட்டை நெருங்கி ஒரு வட்டம் அடித்து நின்றது..
"இறங்கு ராசு.. " என்றார் அவன் மாமா.
வீட்டின் முன் கதிர்வேலுவும் கலையும் மற்றும் அவன் அத்தையும் நின்று கொண்டிருந்தனர். அனைவர் முகத்திலும் ஒரு போலியான சோகம் அப்பி இருக்க...
ராசு மெதுவாக மோட்டாரில் இருந்து இறங்கினான்.
"ராசு.. வாடா.. பாட்டிக்கு ரொம்ப முடிலப்பா.. கடைசியா ஒரு தடவ உன்ன பாக்க ஆசைப்படுது. வா ராசா " என்றார் கதிர்வேலு.
"மாட்டேன் மாட்டேன்.. எனக்கு பயமா இருக்கு... அம்மா " என்று கலைவாணியிடம் சென்று ஒட்டி கொண்டான் ராசு.
"டேய் பாவம் பாட்டி . வா நாங்க கூட வாரோம்" என்று அவனை மெதுவாக தள்ளி கொண்டு மாடிப்படி அருகில் சென்றனர் அனைவரும்.
"ம்ம்ம் ம்ம்ம் " என்று தலை ஆட்டியபடி சென்ற ராசுவை இறுக்கமாக கையை பிடித்து இருந்தாள் அம்மா கலை.
அந்த மாடிப்படி ஒவ்வொன்றாக ஏற ஏற ... ராசுவின் இதயத்துடிப்பும் எகிறியது. .. மேல இருந்த அறை மெதுவாக அவன் கண்களுக்கு தென்பட்டது.. ஒரு சிங்கத்தின் குகை போல அது தெரிந்தது.
ஒரு வழியாக அந்த முடிவடையாத மாடிப்படி பயணம் முடிவுற்று.. ...
அந்த அறை தெரிந்தது. அறை கதவு திறந்து இருக்க...
"வா ராசு. வா.. பாட்டி உள்ளாரதான் இருக்கு." என விடாபிடியாக கலை அவனை இழுக்க, கால்கள் தேய்ந்துகொண்டே அறைக்குள் கொண்டுவரப்பட்டான்.
உள்ளே....
அதை அறை என்று சொல்வதை விட குகை போல இருந்தது..
விசித்திரமான் பல பொருட்கள் அங்கும் இங்கும் இறைந்து கிடந்தன.. பூஜைக்கு பயன்படும் பூக்கள் முதற்கொண்டு, தேங்காய், காய்ந்த மாலைகள், கனிகள் என சிதறி கிடந்தன. சில அடுக்குகளில் கண்ணாடி குப்பிகளில் பல வண்ணங்களில் திரவ பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுவர்களில் கொடுரமான பெயர் தெரியாத கடவுள் படங்கள் தொங்கி கொண்டிருந்தன. மற்றும் ஆணி அடித்து அதில் வண்ண கயிறுகள் தொங்க விடப்பட்டிருந்தன.
அறையின் ஓரத்தில், தரையில் சுண்ணாம்பால் ஒரு சிறிய வட்டம் இடப்பட்டு அதில் ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.
அதை பார்த்ததும் ராசுவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது ....
அறையின் நடுவில் .....
ஒரு கயற்று கட்டில் போடப்பட்டு .. அதில்
பேய்க் கிழவி எனும் சொர்ணா பாட்டி படுத்து இருந்தாள்.
ராசு கண்களை இருக்க மூடி கொண்டவன்.. மெதுவாக திறந்து பார்க்க..
இரண்டு வருடம் முன்பு பார்த்ததிற்கு இபொழுது மிகவும் இளைத்து போய் இருக்க. கை கால்கள் எலும்பும் தோலுமாக தெரிய.
அந்த முகம் ...
சுருக்கங்கள் இன்னும் அதிகமாகி.. தலை மயிர் கொட்டி போய்... தழும்புகள் மட்டும் பிரதானமாக தெரிய.. கண்கள் நல்ல வேளையாக மூடி இருந்தன.
மூச்சு லேசாக வந்து கொண்டிருக்க. நெஞ்சு மெதுவாக மேல கீழே இறங்கி கொண்டிருந்தது.
கதிர்வேலு உடனே "ஆத்தா, பாரு ராசு வந்திருக்கான்.. கூட்டியார சொன்னியே, பாரு ஆத்தா" என சோகம் கலந்த குரலில் சொல்ல..
கிழவியின் கண்கள் மெதுவாக திறந்தன.
கருவிழிகள் இல்லாமல் வெள்ளையாக இருந்த கண்கள் அங்கும் இங்கும் விழித்தன.
"ராசு ராசு ...."
"இங்க இருக்கான் பாரு ஆத்தா." என்று ராசுவை இழுத்து கலை முன்னால் விட ....
கிழவியின் கைகள் நீண்டு ராசுவின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள .....
ராசு இழுக்க பார்த்தும் முடியவில்லை.....வியர்த்து ஒழுகியது அவனுக்கு..
"ராசு.. பாட்டி உன்ன பார்த்ததே இல்லப்பா.. பாட்டிக்குதான் கண்ணு தெரியாதே.. " என ஒரு கட்டை குரல் கிழவியின் தொண்டையில் இருந்து வந்தது.. குரல் நடுக்கமாக இருந்தாலும் மட்டும் மிகவும் கம்பீரமாக இருந்தது.
"ஆத்தா ராசுவ நல்லா ஆசிர்வாதம் பண்ணு ..நல்லபடியா படிச்சு முன்னேறட்டும்.. " என்றார் கதிர்வேலு.
"சரி கதிரு. நீங்க ரெண்டு பெரும் வெளிய இருக்கியளா.. நான் அவனுக்கு மந்திரிச்சு விடணும்.. " என்று கிழவி நடுக்கமான குரலில் சொல்ல..
ராசுவிற்கு பகீர் என்று உரைக்க..
"ஆத்தா அது வந்து ... அவன் ரொம்ப பயப்படறான்" என கதிர்வேலு இழுத்தார்.
"ம்ம்ம் என்னது.. ?" என்ற கிழவி ஒரு முறை முறைத்தாள்.
"சரி ஆத்தா.. கலை, வா புள்ள நாம கொஞ்சம் வெளிய இருப்போம்" கதிர்வேலு தயக்கமாக கலையுடன் மெதுவாக வெளியே சென்றார்.
ராசு "அப்பா அப்பா.." என கத்தியும் கிழவியின் பிடி இரும்பு பிடியாக இறுக, செய்வது அறியாமல் கண்களை இறுக்கமாக மூடி கொண்டான்..
"ராசு பயப்படாதே. என்ன பாரு ராசா.. " என்ற கிழவியின் குரலில் இப்பொழுது நடுக்கம் இல்லை..
ராசு மெதுவாக கண்களை திறந்து பார்க்க. கிழவியின் வெளுத்த கண்கள் இப்பொழுது அவனையே பார்ப்பது போல நிலைகுத்தி நின்றன.. அவளிடம் இப்பொழுது ஒரு புத்துணர்வு வந்து இருந்தது.. அந்த வெளுத்த கண்களில் ஒரு பச்சை ஒளி மிளிர்ந்து மறைந்தது.
"பாட்டி.. என்ன விடு. .நான் போணும்... " என்று அழாக்குறையாக கெஞ்சினான்.
"ராசா.. எங்க போற ..நீ இனி எங்கயும் போக முடியாது.. என்னோட மட்டும்தான் இருப்ப..." என்று கிழவி சிரித்தபோது, முன்வரிசையில் பல பற்கள் காணாமல் போய் இரண்டு மூன்று பற்கள் மட்டும் கறையோடு இருந்தன.
"விடு விடு. என்ன .. என்ன சொல்ற நீ... அம்மா " என கத்தினான் ராசு..
கிழவி முகம் இறுகி,
"ஆமா ராசு.. நான் சொல்றத நல்லா கேளு.. எனக்கு சாவே கிடையாது. 13 அம்மாவசை துர்தேவதைகளுக்கு பூச பண்ணி ரத்த காவு கொடுத்துட்டேன். இனி 200 வருஷம் என் ஆன்மா உயிரோட இருக்கும். ஆனா பாழப்போன இந்த உடம்பு தாங்காது ராசா.. அதனால...."
இப்போது கிழவியின் கண்கள் அவனை உற்று நோக்குவது போல தோன்ற.. திடீர் என மந்திரத்தில் கட்டுண்டது போல ராசு சமைந்து நின்றான்..
பச்சை ஒளி ஒரு கீற்று போல கண்களில் இருந்து கிளம்பியது...
=====================================
உள்ளே ஏதோ சப்தம் கேட்டதும் பதறி போய் கதிர்வேலுவும் கலையும் ஓடி வந்து
பார்த்த போது, அங்கே....
கட்டிலில் கிழவியின் உடல் தளர்ந்து போய் கிடந்தது.. தலை தோய்ந்து போய் கிடக்க..
"ஆத்தா போய்ட்டியே" என்று கதிர்வேலு அழ தொடங்கினார். கலையும் அதில் கலந்து கொண்டாள்.
ஓரமாக நின்ற ராசுவை அவர்கள் கவனிக்கவில்லை..
அவன் தரையை பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான்
அவன் உதட்டில் ஒரு புன்னகை ஒட்டி இருந்தது.. .
கண்களில் ஒரு பச்சை ஒளி மிளிர்ந்து மறைந்தது ..
சின்ராசு இனி எதற்கும் பயப்பட மாட்டான்!!
===========================நிறைவு===========================
( ஒரு குறுங்கதை by Vazzy )
வணக்கம் Vazz,
ReplyDeleteகதை வழக்கம்போல் அருமை..! ஆனால், கதையின் சில காட்சிகள் எனக்கு மர்ம தேசம் தொடரில் வந்த 'விடாது கருப்பு' கதையை நினைவுப்படுத்தின. குறிப்பாக கதாபாத்திரத்தின் பெயர்கள் ராசு, மாடிப்படி கிழவி இப்படி சில விடயங்கள்.
ஆனால் முடிவு உண்மையில் மிக நன்று..! பரகாய பிரவேசத்தை பிரதானிக்கும் சூன்யக்கிழவியின் கதை என்று முடித்தவிதம் மிக அருமை..!
கண்டிப்பாக தொடர்ந்து எழுதவும். நண்பனாய் மட்டுமில்லாமல் வாசகனாய் கேட்டுக் கொள்கிறேன்.
-
DREAMER
Hi Bro...
ReplyDeleteஉங்களின் மேன்தகு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி bro! எனக்கும் மர்ம தேசத்தின் கிழவியும் அந்த சிறுவனும் மனதில் ஓடவே இந்த கதையை எழுதினேன். மற்றும் பரகாய பிரவேசம் என்னும் அருமையான வார்த்தையை தந்ததற்கு மற்றொரு நன்றி... !