Sunday, June 19, 2011

"சில்" என்று பெய்த மழையில் ..... "

               
 ஒரு குறுங்கதை   by VaZ
==============================

"சில்" என்று பெய்த மழையில் அந்த ஜனவரி மாத திங்கட்கிழமையில் அவளை முதலில் பார்த்தேன்.

மருத்துவக்கல்லூரியில் டிகிரி முடிந்து சில நாட்கள் போயிருந்தன.  தினமும் சென்ட்ரல் லைப்ரரி சென்று PG பரீட்சைக்காக தயார் செய்து கொண்டிருந்தேன்.  நான் தங்கி இருந்த புறா கூண்டு மான்சனில் இருந்து  7 எண் பஸ் பிடித்து மதியம் வரை படிப்பு . பின்பு தூக்கம் என சென்று கொண்டு இருந்த காலம் அது.    அன்றும் வழக்கம் போல சென்ட்ரல் லைப்ரரி செல்ல பஸ் ஸ்டாப் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.   கோவையில் பொங்கல் திருநாள் முடிந்தும் பெய்த ஸ்பெஷல் மழை.  வானம் கத்தி வைத்து கிழித்தது போல, சில்வர் அம்புகள் தரை மீது பட்டு தெறித்து, சாலையில் சின்ன சின்ன ஆறுகள் உருவாகி சாக்கடை எனும் கடலில் சங்கமிக்க ஓடும்பொழுது...  குடை கொண்டு வராததால் தலையில் கைக்குட்டை கொண்டு மூடியவாறு அந்த பஸ் ஸ்டாப் நோக்கி ஓடினேன்.   அங்கு கிடைத்த தற்காலிக பாதுகாப்பில் "ஹப்பாடா" என்று சந்தோசப்பட்டு, தலைமுடியை உதறியவாறு, திரும்பியபோது..

அந்த பெண் தென்பட்டாள்.  முகத்தை அழகாக சுருக்கியபடி வானம் எப்பொழுது தன வாய் மூடும் என பார்த்துகொண்டிருந்தாள்.  Girl next door என்று சொல்வார்களே அது போல, ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்த்தவள் போல இருந்தாள்.  சாதாரண ஒரு மஞ்சள் சுடிதாரில், பெரிய ஒப்பனைகள், நகைகள் இல்லாமல் இருந்தாள். கோதுமை நிறம்.  வசீகரமான முகம். பெய்த மழை துளிகள் சில தெறித்து அவள் மீது விழ, அவற்றை கைகளால் தடுத்து விளையாடிகொண்டிருந்தாள், ஒரு சிறு பிள்ளை போல.

அவள் சிலிர்த்து சிரித்தபோது.. அடுக்கான பற்கள் மின்னல் அடிக்க...

ரோட்டிற்கு எதிராக இருந்த டீக்கடையின் கரகரப்பான ரேடியோவில் இருந்து  "புத்தம் புது காலை பொன்னிற வேளை."  என ஜானகி தேன் குரலில் குழைய ...   மழைகாற்றின் இதமான குளிர் உடலை நனைக்க ..  அருகில் ஒரு அழகான யுவதியின் தரிசனம்.. இதைவிட ரொமாண்டிக் தருணம் என் வாழ்க்கையில் கண்டதில்லை.

அப்பொழுது முடிவு செய்தேன்.   இவள்தான் என் வருங்கால துணைவி என்று ....

என்னை பார்த்தும் பார்க்காதது போல திரும்பியவள், ஆனால் ஓரக்கண்னால் என்னை கவனிப்பது தெரிந்தது.

கைகளில் இரண்டு புத்தகங்கள், அதன் மீது ஒரு டிபன் பாக்ஸ், ஒரு சிறிய தோள்பை என்று அவள் உடைமைகள் கலைகல்லூரி மாணவி என பறை சற்றிகொண்டிருந்தன.

அப்படியே ஒரு 10 நிமிடங்கள் கழிந்தன.

மழை வலுவிழந்து தூறலாக மாறி பின் அதுவும் நின்ற பின்..

தேங்கி இருந்த நீரை வாரி இறைத்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. அவள் அதை எதிர்பார்த்தது போல பஸ் ஸ்டாப்பை விட்டு இறங்கி செல்ல...

"ஐயோ.. என் தேவதை போகிறாளே..." என மனதில் சுருக் என குத்த.. ஆனால் இன்னொரு குரல் மீண்டும் கண்டிப்பாக சந்திப்போம் என தேற்றிகொடுததது.

பஸ்ஸில் ஏறும் முன், சற்று அவள் திரும்பி பார்க்க.

என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.  பஸ் நம்பர் 17 மனதுக்குள் ஆணி அடித்த மாதிரி பதிந்தது.

அடுத்த பஸ் பிடித்து லைப்ரரி சென்று அமர்ந்ததும், புத்தகங்களை விரித்தும், மனம் அங்கு செல்லவில்லை.. அவள் முகம் மட்டும் மனக்கண்ணில் வந்து ஆடியதால்.. படிப்பை அப்படியே விட்டு விட்டு மேன்சன் வந்தது விட்டேன்.

இரவு தூக்கம் வராமல் மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துகொண்டு .. மெல்லிய தூறலின் நடுவே நடந்த போது, கீழே எதோ ஒரு ரூமில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் ஒலித்ததை கேட்டு மனம் மேலும் காதல் வயப்பட்டு அவளை பார்க்க ஆவலானது. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. கல்லூரியில் பெண்கள் என்றாலே பிடிக்காத நான், சினிமாக்களில் வரும் ஹீரோ போல நடந்து கொள்கிறேனே! நடுராத்திரி வரை தூக்கம் வராமல் பின்பு அவளை நினைத்தவாறு தூங்கி போனேன்.

அடுத்த நாள். முந்தைய நாள் தாக்கம் சிறிது இருந்தாலும், மழை வீரியம் குறைவாக இருந்தது.  நேற்று வந்த நேரத்திற்கு சிறிது முன்னதாகவே வந்து பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன்.   இன்று பார்த்து சிறிது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.   காலையில்  அயர்ன் செய்த புது சட்டை பளபளக்க நின்று, அவள் வருவாளா என்று சாலையை பார்த்து கொண்டிருந்தேன்.  டீக்கடையில் வேறு " பாரதி கண்ணம்மா ஏனடி செல்லம்மா" என பாடல் ஒலித்து, மனதை வருடி கொண்டிருந்தது.   பொறுமை இல்லாமல் watch  ரோடு என மாறி மாறி பார்த்துகொண்டிருந்தேன்.   அந்த 17 எண் பஸ்சும் வந்து நின்றது.  அவளை காணவில்லை.  பஸ் மெதுவாக நகர ஆரம்பித்தது.

வரமாட்டாளோ இன்று என்று சோகம் அப்ப, முகம் வாடி திரும்பிய போது,

"ஸ்டாப் ஸ்டாப்" என கத்தியவாறு, தூரத்தில் அவள் ஓடி வந்து கொண்டிருந்தாள், நீல சுடிதாரில் மூச்சிரைக்க,  கைகள் புத்தகத்தையும் டிபன் பாக்ஸ்யையும் இறுக்கியவாறு.

(ஆஹா இது பாரதிராஜா படம் போல இருக்கிறதே என்று மனம் எண்ண..)

நெஞ்சை ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கி, திடீர் வீரனாக மாறி ஓடி சென்று . நகரும் பஸ்சின் இரும்பு முதுகை தட்டினேன் பட பட என்று..  "ஸ்டாப் ஸ்டாப். ஒரு ஆளு வராங்க" என கத்தினேன்.  பஸ் சடன் பிரேக் அடித்து நிற்க... ஓடி வந்து ஏறினாள் என் தேவதை.  படியில் இருந்து அவள் திரும்பி என்னை பார்த்து, புன்னகைத்து "தேங்க்ஸ்" என்று சொல்லிய போது.. மனம் சிட்டுகுருவியாய் மாறி பறக்க.. கண்டக்டர் என்னை திட்டிய கெட்ட வார்த்தை கூட இளையராஜா பாடல் போல இனிமையாக தோன்றியது.   பஸ் போய் மறைந்த பிறகும் "பரவாயில்லைங்க" என்று ரொம்ப நேரம் சொல்லிக்கொண்டு இருந்த என்னை ஒரு மாதிரியாக பார்த்தவாறு சென்றது ஒரு ஆன்ட்டி.

இதயத்தில் மத்தாப்பு வெடித்து சிதறி பூவாக தூவ, அன்று முழுவதும் சிரித்தவாறு இருந்தேன்.  இரவில் நீண்ட நாள் கழித்து நண்பனுடம் பீர் அடித்தேன்.

பின்பு நடந்தவை வரலாற்று பிரசித்திபெற்றவை (Rest is history என்று சொல்வார்களே!)

அடுத்த நாள் மீண்டும் பஸ் ஸ்டாப்பில் சந்தித்தோம்.  முதன் முறையாக ஹலோ சொன்னேன்.   சிரித்தாள்.  அவள் பெயர் தர்ஷினி என்று அறிந்தேன்.

அடுத்த அடுத்த சந்திப்புகள் அந்த பஸ் ஸ்டாப்பை என் சொர்க்க ஸ்டாப் ஆக்கின.  தினம் கிடைக்கும் 5 அல்லது 10 நிமிட சந்திப்புகளுக்காக நாள் முழுக்க காத்திருக்க தொடங்கினேன்.

நிறைய சிரித்தாள். கொஞ்சம் பேசினாள்.  ரொம்ப வெட்கப்பட்டாள்.

அவள் பற்றிய விபரங்கள் சின்ன சின்ன உரையாடல்கள் மூலம் கிடைத்தன.  அப்பா கலெக்டர் ஆபீசில் கிளார்க். ரொம்ப கண்டிப்பானவர்.  அம்மா வீட்டுடன் மனைவி.   ஒரு தம்பி கான்வென்டில் பத்தாம் வகுப்பு என்று அழகான மிடில் கிளாஸ் குடும்பம்.   அவளுக்கு பிடித்த நடிகர், படம், கலர், இசை, பூ, என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டேன். டீக்கடை பாடல்கள் தேசிய கீதம் ஆகி விட்டன. இவள் மட்டுமே என் வாழ்க்கை துணை என்று மனதில் பொறித்து விட்டேன்.

இரண்டு வாரங்கள் இப்படியே போய் விட, என் காதலை எப்படி இவளிடம் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தேன். அவளுக்கு என்னை பிடிக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தாலும், நான்தானே முதல் ஸ்டெப் எடுக்க வேண்டும்.  என்ன செய்யலாம்  என்று எண்ணி கொண்டிருந்த போது, தோதாக அடுத்த வாரம் பிப் 14 , காதலர் தினம் வந்து சேர்ந்தது.

அதற்கு முந்தைய நாள் பிப் 13, தர்ஷினியை சந்தித்த போது.....

"நாளைக்கு மீட் பண்ணலாமா ப்ளீஸ்.."

"ஐயோ.. நாளைக்கா, வேண்டாம். வீட்ல கண்டிப்பா மாட்டிக்குவேன்.  லீவ் நாள் வேற.  டிரஸ் பண்ணிட்டு கிளம்பினா அப்பாவுக்கு தெரிஞ்சிடும்."

"ஹே ப்ளீஸ், தர்ஷு, நாளைக்கு கண்டிப்பாக பார்த்தே ஆகணும். காலைல இல்லாட்டி மதியம் வா, இல்லாட்டி சாயங்காலம். எதாவது கிளாஸ் மேட் பார்க்க போறேன்னு சொல்லிட்டு வா, ஒரு மூணு நாலு மணி நேரம் ஸ்பென்ட் பண்ற மாதிரி. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினேன்.

"சரி. பாக்குறேன். பட் ப்ராமிஸ் எல்லாம் பண்ண முடியாதுப்பா" என்று சிணுங்கினாள்.

" ஓகே " என்ற எனக்கு அவள் கட்டாயம் நாளை வருவாள் என்று தெரியும்.

" ம். நாளைக்கு சாயங்காலம் கம்ப்யூட்டர் கிளாஸ் இருக்கு. அத வேணும்னா கட் அடிச்சிட்டு மீட் பண்ணலாம். கொஞ்சம் சீக்கிரமா 5  மணிக்கு வரேன்.   இங்கயே மீட் பண்ணலாம்  ஓகே வா?  " என்றாள்

"சரி ஓகே.  இங்க மீட் பண்ணி, வேற எங்கயாச்சும் போய்க்கலாம். 5 மணி ஷார்ப். சரியா? "

"சரி" என்று அவசரமாக வந்த பேருந்தில் ஏறி .. என்னை பார்த்து சிரித்தாள். 

அன்று சாயங்காலம் ஒரே பரபரப்பாக கழிந்தது. நண்பனிடம் மீட்டர் போட்டு கொஞ்சம் பணம் வாங்கி புது காலர் வைத்த டி ஷர்ட் வாங்கி கொண்டேன்.  Archies  கேலரி சென்றேன் (ஹப்பா.. என்ன ஒரு கூட்டம் .. நாளைக்குதான் பல பேரு காதலை சொல்றான் போல !).  ரத்த சிவப்பு நிற ஹார்ட் படம் போட்டு  I lLOVE YOU என்று அழகாக பொறித்த வழவழப்பான வாழ்த்து அட்டையை தேர்ந்து எடுத்தேன்.   ஒரு சிறிய கரடி பொம்மை (பெரிய பொம்மை விலை 500 ரூபாயாம். அடப்பாவி) ஜிகுஜிகு ஜிகினா பேப்பர் சுற்றிய பரிசு பெட்டியில் வாங்கி கொண்டேன். 

இரவு மேன்சன் ரூமில் நாளைக்கு எப்படி அவளிடம் சொல்வது என்று ஹிந்தி தமிழ் இங்கிலீஷ் என்று மாற்றி மாற்றி கண்ணாடி முன் நின்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.  வாழ்த்து அட்டையில் ஸ்கெட்ச் பேனா வைத்து அழகாக ஒரு கவிதை எழுதி, I love you என்று முடித்தேன். கவரில் வைத்து கவனமாக ஒட்டி வைத்து விட்டு, பரிசு பெட்டியையும் சேர்த்து வைத்து அழகு பார்த்தேன். பின் இனிப்பான கனவுகளுடன் உறங்கி போனேன்.


(நிற்க:  வாசகரே, இந்த இடத்தில கதையை முடிப்பதில் ஏற்பட்ட சிறு மனமாற்றத்தால், முதலில் தோன்றிய முடிவுடன் மற்றொரு முடிவும் சேர்ந்து விட்டது. அதனால் கதைக்கு இரண்டு முடிவுகள் இருக்கின்றன!  காதல் மற்றும் டிராமா கதை ரசிப்பவர்கள் Ending B யை படிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. அது த்ரில்லர்/ஹாரர்  ரசிகர்களுக்காக!)

Ending A:

மார்ச் 15.

அந்த பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள டீக்கடை.

மழை ஏதும் இல்லாமல். சுள் என வெய்யில் அடித்தது. ரேடியோவில் "என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது" என பாடி கொண்டிருந்தது.

டீ மாஸ்டர் மற்றும் கடை ஓனர் பாய்லரில் வெந்நீர் பிடித்து கொண்டிருந்தார். சூடான டீயை ஆற்றி குடித்து கொண்டிருந்த அந்த பக்கத்துக்கு கடை மெக்கானிக் மாஸ்டரை நோக்கி, 

"மாஸ்டர், நானும் கேக்கனும்னே நினைச்சேன். ஒரு மாசமா நானும் பாக்கிறேன். எதுத்த பஸ் ஸ்டாப்பில் அந்த பையன் வந்து காலைல இருந்து நின்னுகிட்டே இருக்கான்.  வெறிச்சு பாத்துகிட்டே இருக்கான், கைல எதோ பெட்டி மாறி வேற வச்சிருக்கான், சாயங்காலம் ஆனா போயிடுறான். ஆள பார்த்த நல்லா படிச்சவன் மாறி தெரியறான். யாரிவன், பைத்தியமா?"

மாஸ்டர் ஒரு வித விரக்தியுடன் சொன்னார், "ஹும்ம், ஏன் கேக்குற வேலு, பைத்தியம் மாறிதான், அந்த பையன் தினமும் அங்க ஒரு பொண்ண வந்து பார்ப்பான், லவ் பண்ணினான் போல இருக்கு, காதலர் தினம் அன்னைக்கு பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கான்.  அன்னைக்குதான் இந்த பாழாய்ப்போன வெடிகுண்டு வெடிச்சது இல்ல.. அந்த பொண்ணு இவன பாக்கறதுக்கு முன்னாடி கிபிட் வாங்க காம்ப்ளெக்ஸ் போயிருக்க, அங்கயும் ஒரு குண்டு வெடிச்சதே. அதில சிதறி போய்ட்டா பாவம்.  அவன் கிட்ட எவ்வளோவோ சொல்லி பார்த்தாங்க அவன் நண்பர்கள் எல்லாம்.  அவனால அத ஜீரணிக்கவே முடியல. அதில இருந்தே தினமும் இங்க வந்து நின்னுட்டுதான் போறான்.  என்ன பண்ண எல்லாம் விதி!"

"ஒ பாவம்பா அந்த பையன், எல்லாம் நேரம்" என்று அவனை பார்த்துவிட்டு நகர்ந்தான் வேலு.

பஸ் ஸ்டாப்பில் கிப்ட் பெட்டியுடன் நின்றிருந்த இளைஞனின் கண்களில் ஒரு வெறுமை தெரிந்தது.

+++++++++++++ END +++++++++++++

http://www.rediff.com/news/1998/feb/14blast.htm

Ending B.
பிப் 15.

வானம் லேசாக மேகமூட்டமாக காணப்பட்டது.  காற்று வேறு பலமாக வீசிகொண்டிருந்தது. பஸ் ஸ்டாப் நோக்கி வேகமாக நடந்தேன். லைப்ரரி செல்ல நேரமாகி விட்டது அல்லவா...

(வெயிட். நேற்று என்ன நடந்தது என்று கேட்கறீர்களா? சுருக்கமாக  சொல்கிறேன்.  நண்பனிடன் கெஞ்சி வாங்கிய பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன்.   சரியாக 5 ணிக்கு வந்தாள் தர்ஷினி.  சிகப்பு நிற சுரிதாரில் ஜோராக இருந்தாள். 30  நிமிட தூரத்தில் இருக்கும் ஆனைகட்டியின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு போகலாம் என்றேன். முதலில் மறுத்தவள், நான் கெஞ்சியதும் சரி என்றாள்.  மாலை மயங்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு காட்டிற்குள் சென்றோம்.  பயந்தவாறு வந்தாள்.  நல்லதாக ஒரு ரொமாண்டிக் ஸ்பாட் பார்த்து என் காதலை சொன்னேன். "நானும்தான்" என்று வெட்கத்துடன் ஏற்று கொண்டாள்.  என் மனம் முழுக்க சந்தோசத்துடன், கல்யாணம் பண்ணிக்கலாம்தானே என்றேன். தலையை ஆட்டினாள்.  அப்புறம் என்ன ஒன்று சேர்ந்து விடுவோம் என்றேன்.  மறுத்தாள்.  மீண்டும் கேட்டேன். முடியாது என்று கூறி, என்னை உடனே கூட்டி போ இங்கிருந்து என்றாள்.  மறுத்தேன்.  பிடிவாதம் பிடித்தாள். என் கண்களில் சிகப்பு நுரை ஒன்று படர்ந்தது (something snapped என்று கூறுவார்களே). எப்பொழுதும் கூட வைத்திருக்கும் சிறிய surgical scalpel எடுத்து, அவள் கழுத்தில் துடிக்கும் முக்கியமான ஜூகுளர் ரத்த நாளத்தை லேசாக ஒரு கீறு, அவ்வளவுதான்,  அப்புறம் அவள் சப்தம் எதுவும் போடவில்லை!  கல்லூரியில் கூட இப்படிதான் ஒருத்தி அடம் பிடித்தாள்.   அவளுக்கும் இதே கதிதானே நடந்தது.  அதனால்தானே பெண்களிடம் இருந்து ஒதுங்கி இருந்தேன்.  மீண்டும் இப்படி செய்ய வைத்துவிட்டாயே தர்ஷினி!

அடர்ந்த காட்டில் ஒரு உடலை மறைக்கவா இடம் இல்லை. மறைத்துவிட்டு, அவளுக்காக ஒரு சிறிய பிரார்த்தனை செய்து விட்டு வந்து விட்டேன்).

பஸ் ஸ்டாப் நெருங்கிய போது, அங்கே ஓர் பெண் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. ஓ, கடவுள் எனக்காக அனுப்பி வைத்த அடுத்த வாழ்க்கை துணைவியோ?  என் மனதில் சந்தோஷம் பொங்கஅவளை நெருங்கினேன்.  வேறு புறம் பார்த்து நின்று கொண்டிருந்த அவள், என்னை பார்த்து திரும்பினாள்.

வெலவெலத்து போனேன். அது தர்ஷினி! என்ன இது.. எனக்கு கண்களை நம்ப முடியவில்லை.  என்னை பார்த்து மெதுவாக அவள் சிரித்த போது, சப்தநாடியும் ஒடுங்க, வேகமாக மேன்சன் வரை ஓடியே வந்து விட்டேன்.  ரூமை திறந்து மூச்சிரைக்க.. தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என குடித்துவிட்டு திரும்பினால்..

கட்டில் மீது தர்ஷினி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

"நீ நீ.,,செத்து போய்ட்டியே... இங்க எப்படி." பிதற்றினேன். அவள் பேசவே இல்லை. ரத்தம் உறையும் அந்த புன்னகை மட்டும்..

இப்பொழுதெல்லாம் என் கூடவே அவள் இருக்கிறாள்.  நான் எங்கு சென்றாலும்.  லைப்ரரி சென்றேன். அங்கும் வந்து என் எதிரில் அமர்கிறாள். சினிமா போனேன். அங்கும் வந்து பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்தாள்.  கடைசியில்  போலீஸ் நிலையத்தில் சென்று சரண் அடைந்தேன்.  அங்கேயும் விடுவதில்லை. Lockup-ல் இருட்டில் என் கூடவே இருக்கிறாள்.  ஓ  இதுதான் வாழ்க்கை துணை என்று தாமதமாக புரிந்தது எனக்கு!

குறிப்பு:   Ending B க்கான கதைக்களம் 1998 அல்ல என்பதை நினைவில் கொள்க.

            ++++++++++++END +++++++++++++++

1 comment:

  1. ending A - 7g rainbow colony poda kkoooooooooo
    ending B ok goood

    ReplyDelete