Sunday, August 14, 2011
Sunday, June 19, 2011
"சில்" என்று பெய்த மழையில் ..... "
ஒரு குறுங்கதை by VaZ
==============================
"சில்" என்று பெய்த மழையில் அந்த ஜனவரி மாத திங்கட்கிழமையில் அவளை முதலில் பார்த்தேன்.
மருத்துவக்கல்லூரியில் டிகிரி முடிந்து சில நாட்கள் போயிருந்தன. தினமும் சென்ட்ரல் லைப்ரரி சென்று PG பரீட்சைக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். நான் தங்கி இருந்த புறா கூண்டு மான்சனில் இருந்து 7 எண் பஸ் பிடித்து மதியம் வரை படிப்பு . பின்பு தூக்கம் என சென்று கொண்டு இருந்த காலம் அது. அன்றும் வழக்கம் போல சென்ட்ரல் லைப்ரரி செல்ல பஸ் ஸ்டாப் நோக்கி சென்று கொண்டிருந்தேன். கோவையில் பொங்கல் திருநாள் முடிந்தும் பெய்த ஸ்பெஷல் மழை. வானம் கத்தி வைத்து கிழித்தது போல, சில்வர் அம்புகள் தரை மீது பட்டு தெறித்து, சாலையில் சின்ன சின்ன ஆறுகள் உருவாகி சாக்கடை எனும் கடலில் சங்கமிக்க ஓடும்பொழுது... குடை கொண்டு வராததால் தலையில் கைக்குட்டை கொண்டு மூடியவாறு அந்த பஸ் ஸ்டாப் நோக்கி ஓடினேன். அங்கு கிடைத்த தற்காலிக பாதுகாப்பில் "ஹப்பாடா" என்று சந்தோசப்பட்டு, தலைமுடியை உதறியவாறு, திரும்பியபோது..
அந்த பெண் தென்பட்டாள். முகத்தை அழகாக சுருக்கியபடி வானம் எப்பொழுது தன வாய் மூடும் என பார்த்துகொண்டிருந்தாள். Girl next door என்று சொல்வார்களே அது போல, ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்த்தவள் போல இருந்தாள். சாதாரண ஒரு மஞ்சள் சுடிதாரில், பெரிய ஒப்பனைகள், நகைகள் இல்லாமல் இருந்தாள். கோதுமை நிறம். வசீகரமான முகம். பெய்த மழை துளிகள் சில தெறித்து அவள் மீது விழ, அவற்றை கைகளால் தடுத்து விளையாடிகொண்டிருந்தாள், ஒரு சிறு பிள்ளை போல.
அவள் சிலிர்த்து சிரித்தபோது.. அடுக்கான பற்கள் மின்னல் அடிக்க...
ரோட்டிற்கு எதிராக இருந்த டீக்கடையின் கரகரப்பான ரேடியோவில் இருந்து "புத்தம் புது காலை பொன்னிற வேளை." என ஜானகி தேன் குரலில் குழைய ... மழைகாற்றின் இதமான குளிர் உடலை நனைக்க .. அருகில் ஒரு அழகான யுவதியின் தரிசனம்.. இதைவிட ரொமாண்டிக் தருணம் என் வாழ்க்கையில் கண்டதில்லை.
அப்பொழுது முடிவு செய்தேன். இவள்தான் என் வருங்கால துணைவி என்று ....
என்னை பார்த்தும் பார்க்காதது போல திரும்பியவள், ஆனால் ஓரக்கண்னால் என்னை கவனிப்பது தெரிந்தது.
கைகளில் இரண்டு புத்தகங்கள், அதன் மீது ஒரு டிபன் பாக்ஸ், ஒரு சிறிய தோள்பை என்று அவள் உடைமைகள் கலைகல்லூரி மாணவி என பறை சற்றிகொண்டிருந்தன.
அப்படியே ஒரு 10 நிமிடங்கள் கழிந்தன.
மழை வலுவிழந்து தூறலாக மாறி பின் அதுவும் நின்ற பின்..
தேங்கி இருந்த நீரை வாரி இறைத்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. அவள் அதை எதிர்பார்த்தது போல பஸ் ஸ்டாப்பை விட்டு இறங்கி செல்ல...
"ஐயோ.. என் தேவதை போகிறாளே..." என மனதில் சுருக் என குத்த.. ஆனால் இன்னொரு குரல் மீண்டும் கண்டிப்பாக சந்திப்போம் என தேற்றிகொடுததது.
பஸ்ஸில் ஏறும் முன், சற்று அவள் திரும்பி பார்க்க.
என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. பஸ் நம்பர் 17 மனதுக்குள் ஆணி அடித்த மாதிரி பதிந்தது.
அடுத்த பஸ் பிடித்து லைப்ரரி சென்று அமர்ந்ததும், புத்தகங்களை விரித்தும், மனம் அங்கு செல்லவில்லை.. அவள் முகம் மட்டும் மனக்கண்ணில் வந்து ஆடியதால்.. படிப்பை அப்படியே விட்டு விட்டு மேன்சன் வந்தது விட்டேன்.
இரவு தூக்கம் வராமல் மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துகொண்டு .. மெல்லிய தூறலின் நடுவே நடந்த போது, கீழே எதோ ஒரு ரூமில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் ஒலித்ததை கேட்டு மனம் மேலும் காதல் வயப்பட்டு அவளை பார்க்க ஆவலானது. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. கல்லூரியில் பெண்கள் என்றாலே பிடிக்காத நான், சினிமாக்களில் வரும் ஹீரோ போல நடந்து கொள்கிறேனே! நடுராத்திரி வரை தூக்கம் வராமல் பின்பு அவளை நினைத்தவாறு தூங்கி போனேன்.
அடுத்த நாள். முந்தைய நாள் தாக்கம் சிறிது இருந்தாலும், மழை வீரியம் குறைவாக இருந்தது. நேற்று வந்த நேரத்திற்கு சிறிது முன்னதாகவே வந்து பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். இன்று பார்த்து சிறிது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலையில் அயர்ன் செய்த புது சட்டை பளபளக்க நின்று, அவள் வருவாளா என்று சாலையை பார்த்து கொண்டிருந்தேன். டீக்கடையில் வேறு " பாரதி கண்ணம்மா ஏனடி செல்லம்மா" என பாடல் ஒலித்து, மனதை வருடி கொண்டிருந்தது. பொறுமை இல்லாமல் watch ரோடு என மாறி மாறி பார்த்துகொண்டிருந்தேன். அந்த 17 எண் பஸ்சும் வந்து நின்றது. அவளை காணவில்லை. பஸ் மெதுவாக நகர ஆரம்பித்தது.
வரமாட்டாளோ இன்று என்று சோகம் அப்ப, முகம் வாடி திரும்பிய போது,
"ஸ்டாப் ஸ்டாப்" என கத்தியவாறு, தூரத்தில் அவள் ஓடி வந்து கொண்டிருந்தாள், நீல சுடிதாரில் மூச்சிரைக்க, கைகள் புத்தகத்தையும் டிபன் பாக்ஸ்யையும் இறுக்கியவாறு.
(ஆஹா இது பாரதிராஜா படம் போல இருக்கிறதே என்று மனம் எண்ண..)
நெஞ்சை ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கி, திடீர் வீரனாக மாறி ஓடி சென்று . நகரும் பஸ்சின் இரும்பு முதுகை தட்டினேன் பட பட என்று.. "ஸ்டாப் ஸ்டாப். ஒரு ஆளு வராங்க" என கத்தினேன். பஸ் சடன் பிரேக் அடித்து நிற்க... ஓடி வந்து ஏறினாள் என் தேவதை. படியில் இருந்து அவள் திரும்பி என்னை பார்த்து, புன்னகைத்து "தேங்க்ஸ்" என்று சொல்லிய போது.. மனம் சிட்டுகுருவியாய் மாறி பறக்க.. கண்டக்டர் என்னை திட்டிய கெட்ட வார்த்தை கூட இளையராஜா பாடல் போல இனிமையாக தோன்றியது. பஸ் போய் மறைந்த பிறகும் "பரவாயில்லைங்க" என்று ரொம்ப நேரம் சொல்லிக்கொண்டு இருந்த என்னை ஒரு மாதிரியாக பார்த்தவாறு சென்றது ஒரு ஆன்ட்டி.
இதயத்தில் மத்தாப்பு வெடித்து சிதறி பூவாக தூவ, அன்று முழுவதும் சிரித்தவாறு இருந்தேன். இரவில் நீண்ட நாள் கழித்து நண்பனுடம் பீர் அடித்தேன்.
பின்பு நடந்தவை வரலாற்று பிரசித்திபெற்றவை (Rest is history என்று சொல்வார்களே!)
அடுத்த நாள் மீண்டும் பஸ் ஸ்டாப்பில் சந்தித்தோம். முதன் முறையாக ஹலோ சொன்னேன். சிரித்தாள். அவள் பெயர் தர்ஷினி என்று அறிந்தேன்.
அடுத்த அடுத்த சந்திப்புகள் அந்த பஸ் ஸ்டாப்பை என் சொர்க்க ஸ்டாப் ஆக்கின. தினம் கிடைக்கும் 5 அல்லது 10 நிமிட சந்திப்புகளுக்காக நாள் முழுக்க காத்திருக்க தொடங்கினேன்.
நிறைய சிரித்தாள். கொஞ்சம் பேசினாள். ரொம்ப வெட்கப்பட்டாள்.
அவள் பற்றிய விபரங்கள் சின்ன சின்ன உரையாடல்கள் மூலம் கிடைத்தன. அப்பா கலெக்டர் ஆபீசில் கிளார்க். ரொம்ப கண்டிப்பானவர். அம்மா வீட்டுடன் மனைவி. ஒரு தம்பி கான்வென்டில் பத்தாம் வகுப்பு என்று அழகான மிடில் கிளாஸ் குடும்பம். அவளுக்கு பிடித்த நடிகர், படம், கலர், இசை, பூ, என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டேன். டீக்கடை பாடல்கள் தேசிய கீதம் ஆகி விட்டன. இவள் மட்டுமே என் வாழ்க்கை துணை என்று மனதில் பொறித்து விட்டேன்.
இரண்டு வாரங்கள் இப்படியே போய் விட, என் காதலை எப்படி இவளிடம் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தேன். அவளுக்கு என்னை பிடிக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தாலும், நான்தானே முதல் ஸ்டெப் எடுக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று எண்ணி கொண்டிருந்த போது, தோதாக அடுத்த வாரம் பிப் 14 , காதலர் தினம் வந்து சேர்ந்தது.
அதற்கு முந்தைய நாள் பிப் 13, தர்ஷினியை சந்தித்த போது.....
"நாளைக்கு மீட் பண்ணலாமா ப்ளீஸ்.."
"ஐயோ.. நாளைக்கா, வேண்டாம். வீட்ல கண்டிப்பா மாட்டிக்குவேன். லீவ் நாள் வேற. டிரஸ் பண்ணிட்டு கிளம்பினா அப்பாவுக்கு தெரிஞ்சிடும்."
"ஹே ப்ளீஸ், தர்ஷு, நாளைக்கு கண்டிப்பாக பார்த்தே ஆகணும். காலைல இல்லாட்டி மதியம் வா, இல்லாட்டி சாயங்காலம். எதாவது கிளாஸ் மேட் பார்க்க போறேன்னு சொல்லிட்டு வா, ஒரு மூணு நாலு மணி நேரம் ஸ்பென்ட் பண்ற மாதிரி. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினேன்.
"சரி. பாக்குறேன். பட் ப்ராமிஸ் எல்லாம் பண்ண முடியாதுப்பா" என்று சிணுங்கினாள்.
" ஓகே " என்ற எனக்கு அவள் கட்டாயம் நாளை வருவாள் என்று தெரியும்.
" ம். நாளைக்கு சாயங்காலம் கம்ப்யூட்டர் கிளாஸ் இருக்கு. அத வேணும்னா கட் அடிச்சிட்டு மீட் பண்ணலாம். கொஞ்சம் சீக்கிரமா 5 மணிக்கு வரேன். இங்கயே மீட் பண்ணலாம் ஓகே வா? " என்றாள்
"சரி ஓகே. இங்க மீட் பண்ணி, வேற எங்கயாச்சும் போய்க்கலாம். 5 மணி ஷார்ப். சரியா? "
"சரி" என்று அவசரமாக வந்த பேருந்தில் ஏறி .. என்னை பார்த்து சிரித்தாள்.
அன்று சாயங்காலம் ஒரே பரபரப்பாக கழிந்தது. நண்பனிடம் மீட்டர் போட்டு கொஞ்சம் பணம் வாங்கி புது காலர் வைத்த டி ஷர்ட் வாங்கி கொண்டேன். Archies கேலரி சென்றேன் (ஹப்பா.. என்ன ஒரு கூட்டம் .. நாளைக்குதான் பல பேரு காதலை சொல்றான் போல !). ரத்த சிவப்பு நிற ஹார்ட் படம் போட்டு I lLOVE YOU என்று அழகாக பொறித்த வழவழப்பான வாழ்த்து அட்டையை தேர்ந்து எடுத்தேன். ஒரு சிறிய கரடி பொம்மை (பெரிய பொம்மை விலை 500 ரூபாயாம். அடப்பாவி) ஜிகுஜிகு ஜிகினா பேப்பர் சுற்றிய பரிசு பெட்டியில் வாங்கி கொண்டேன்.
இரவு மேன்சன் ரூமில் நாளைக்கு எப்படி அவளிடம் சொல்வது என்று ஹிந்தி தமிழ் இங்கிலீஷ் என்று மாற்றி மாற்றி கண்ணாடி முன் நின்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன். வாழ்த்து அட்டையில் ஸ்கெட்ச் பேனா வைத்து அழகாக ஒரு கவிதை எழுதி, I love you என்று முடித்தேன். கவரில் வைத்து கவனமாக ஒட்டி வைத்து விட்டு, பரிசு பெட்டியையும் சேர்த்து வைத்து அழகு பார்த்தேன். பின் இனிப்பான கனவுகளுடன் உறங்கி போனேன்.
(நிற்க: வாசகரே, இந்த இடத்தில கதையை முடிப்பதில் ஏற்பட்ட சிறு மனமாற்றத்தால், முதலில் தோன்றிய முடிவுடன் மற்றொரு முடிவும் சேர்ந்து விட்டது. அதனால் கதைக்கு இரண்டு முடிவுகள் இருக்கின்றன! காதல் மற்றும் டிராமா கதை ரசிப்பவர்கள் Ending B யை படிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. அது த்ரில்லர்/ஹாரர் ரசிகர்களுக்காக!)
Ending A:
மார்ச் 15.
அந்த பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள டீக்கடை.
மழை ஏதும் இல்லாமல். சுள் என வெய்யில் அடித்தது. ரேடியோவில் "என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது" என பாடி கொண்டிருந்தது.
டீ மாஸ்டர் மற்றும் கடை ஓனர் பாய்லரில் வெந்நீர் பிடித்து கொண்டிருந்தார். சூடான டீயை ஆற்றி குடித்து கொண்டிருந்த அந்த பக்கத்துக்கு கடை மெக்கானிக் மாஸ்டரை நோக்கி,
"மாஸ்டர், நானும் கேக்கனும்னே நினைச்சேன். ஒரு மாசமா நானும் பாக்கிறேன். எதுத்த பஸ் ஸ்டாப்பில் அந்த பையன் வந்து காலைல இருந்து நின்னுகிட்டே இருக்கான். வெறிச்சு பாத்துகிட்டே இருக்கான், கைல எதோ பெட்டி மாறி வேற வச்சிருக்கான், சாயங்காலம் ஆனா போயிடுறான். ஆள பார்த்த நல்லா படிச்சவன் மாறி தெரியறான். யாரிவன், பைத்தியமா?"
மாஸ்டர் ஒரு வித விரக்தியுடன் சொன்னார், "ஹும்ம், ஏன் கேக்குற வேலு, பைத்தியம் மாறிதான், அந்த பையன் தினமும் அங்க ஒரு பொண்ண வந்து பார்ப்பான், லவ் பண்ணினான் போல இருக்கு, காதலர் தினம் அன்னைக்கு பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கான். அன்னைக்குதான் இந்த பாழாய்ப்போன வெடிகுண்டு வெடிச்சது இல்ல.. அந்த பொண்ணு இவன பாக்கறதுக்கு முன்னாடி கிபிட் வாங்க காம்ப்ளெக்ஸ் போயிருக்க, அங்கயும் ஒரு குண்டு வெடிச்சதே. அதில சிதறி போய்ட்டா பாவம். அவன் கிட்ட எவ்வளோவோ சொல்லி பார்த்தாங்க அவன் நண்பர்கள் எல்லாம். அவனால அத ஜீரணிக்கவே முடியல. அதில இருந்தே தினமும் இங்க வந்து நின்னுட்டுதான் போறான். என்ன பண்ண எல்லாம் விதி!"
"ஒ பாவம்பா அந்த பையன், எல்லாம் நேரம்" என்று அவனை பார்த்துவிட்டு நகர்ந்தான் வேலு.
பஸ் ஸ்டாப்பில் கிப்ட் பெட்டியுடன் நின்றிருந்த இளைஞனின் கண்களில் ஒரு வெறுமை தெரிந்தது.
+++++++++++++ END +++++++++++++
http://www.rediff.com/news/1998/feb/14blast.htm
Ending B.
பிப் 15.
வானம் லேசாக மேகமூட்டமாக காணப்பட்டது. காற்று வேறு பலமாக வீசிகொண்டிருந்தது. பஸ் ஸ்டாப் நோக்கி வேகமாக நடந்தேன். லைப்ரரி செல்ல நேரமாகி விட்டது அல்லவா...
(வெயிட். நேற்று என்ன நடந்தது என்று கேட்கறீர்களா? சுருக்கமாக சொல்கிறேன். நண்பனிடன் கெஞ்சி வாங்கிய பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன். சரியாக 5 ணிக்கு வந்தாள் தர்ஷினி. சிகப்பு நிற சுரிதாரில் ஜோராக இருந்தாள். 30 நிமிட தூரத்தில் இருக்கும் ஆனைகட்டியின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு போகலாம் என்றேன். முதலில் மறுத்தவள், நான் கெஞ்சியதும் சரி என்றாள். மாலை மயங்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு காட்டிற்குள் சென்றோம். பயந்தவாறு வந்தாள். நல்லதாக ஒரு ரொமாண்டிக் ஸ்பாட் பார்த்து என் காதலை சொன்னேன். "நானும்தான்" என்று வெட்கத்துடன் ஏற்று கொண்டாள். என் மனம் முழுக்க சந்தோசத்துடன், கல்யாணம் பண்ணிக்கலாம்தானே என்றேன். தலையை ஆட்டினாள். அப்புறம் என்ன ஒன்று சேர்ந்து விடுவோம் என்றேன். மறுத்தாள். மீண்டும் கேட்டேன். முடியாது என்று கூறி, என்னை உடனே கூட்டி போ இங்கிருந்து என்றாள். மறுத்தேன். பிடிவாதம் பிடித்தாள். என் கண்களில் சிகப்பு நுரை ஒன்று படர்ந்தது (something snapped என்று கூறுவார்களே). எப்பொழுதும் கூட வைத்திருக்கும் சிறிய surgical scalpel எடுத்து, அவள் கழுத்தில் துடிக்கும் முக்கியமான ஜூகுளர் ரத்த நாளத்தை லேசாக ஒரு கீறு, அவ்வளவுதான், அப்புறம் அவள் சப்தம் எதுவும் போடவில்லை! கல்லூரியில் கூட இப்படிதான் ஒருத்தி அடம் பிடித்தாள். அவளுக்கும் இதே கதிதானே நடந்தது. அதனால்தானே பெண்களிடம் இருந்து ஒதுங்கி இருந்தேன். மீண்டும் இப்படி செய்ய வைத்துவிட்டாயே தர்ஷினி!
அடர்ந்த காட்டில் ஒரு உடலை மறைக்கவா இடம் இல்லை. மறைத்துவிட்டு, அவளுக்காக ஒரு சிறிய பிரார்த்தனை செய்து விட்டு வந்து விட்டேன்).
பஸ் ஸ்டாப் நெருங்கிய போது, அங்கே ஓர் பெண் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. ஓ, கடவுள் எனக்காக அனுப்பி வைத்த அடுத்த வாழ்க்கை துணைவியோ? என் மனதில் சந்தோஷம் பொங்கஅவளை நெருங்கினேன். வேறு புறம் பார்த்து நின்று கொண்டிருந்த அவள், என்னை பார்த்து திரும்பினாள்.
வெலவெலத்து போனேன். அது தர்ஷினி! என்ன இது.. எனக்கு கண்களை நம்ப முடியவில்லை. என்னை பார்த்து மெதுவாக அவள் சிரித்த போது, சப்தநாடியும் ஒடுங்க, வேகமாக மேன்சன் வரை ஓடியே வந்து விட்டேன். ரூமை திறந்து மூச்சிரைக்க.. தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என குடித்துவிட்டு திரும்பினால்..
கட்டில் மீது தர்ஷினி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
"நீ நீ.,,செத்து போய்ட்டியே... இங்க எப்படி." பிதற்றினேன். அவள் பேசவே இல்லை. ரத்தம் உறையும் அந்த புன்னகை மட்டும்..
இப்பொழுதெல்லாம் என் கூடவே அவள் இருக்கிறாள். நான் எங்கு சென்றாலும். லைப்ரரி சென்றேன். அங்கும் வந்து என் எதிரில் அமர்கிறாள். சினிமா போனேன். அங்கும் வந்து பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்தாள். கடைசியில் போலீஸ் நிலையத்தில் சென்று சரண் அடைந்தேன். அங்கேயும் விடுவதில்லை. Lockup-ல் இருட்டில் என் கூடவே இருக்கிறாள். ஓ இதுதான் வாழ்க்கை துணை என்று தாமதமாக புரிந்தது எனக்கு!
குறிப்பு: Ending B க்கான கதைக்களம் 1998 அல்ல என்பதை நினைவில் கொள்க.
++++++++++++END +++++++++++++++
Friday, June 17, 2011
Unknown - 2011 - a Quikreview by Vaz
Unknown is the new explosive action thriller based on a french novel by Didier van Cauwelaert starring Liam Neeson, Diane Kruger, Aidan Quinn among others and directed by Jaume Collet-Serra known for horror movies like House of Wax and The Orphan. Neeson stars as Dr. Martin Harris, who arrives at Berlin with his pretty wife for a biotech summit. He is involved in a road traffic accident and wakes up in a hospital with his memory jaded and able to remember only in bits and pieces. Going to the hotel where he was supposed to be staying, he finds that another man has taken his identity. Unalbe to convicne the authorities that he is the real Martin, he goes in search of who he is, is he really whom he thinks he is, with each peice of puzzle making him to question his own sanity. He has a pretty lass riding shotgun through these adventures. The film starts off with a bang and does not let go till the explosive climax. Liam Neeson starts off where he left from in A Team, Taken etc., and gives a power-packed performance and is entirely believable as the man with lost identity. Lookout for a well crafted car chase sequence in the streets of Berlin which is a real white knuckle ride. On the flip side though, the movie is a tad lengthy at 1 hour 53 minutes and fans of Bourne series may find this premise all too familiar. Otherwise, do not start watching the movie late at night, as you may not be able to switch it off before the climax!
Thursday, May 26, 2011
சின்ராசு
சின்ராசுக்கு அன்று பள்ளிக்கூடம் விடும்போதே தோன்றி விட்டது, இன்று சாயங்காலம் அந்த சம்பவம் நடந்துவிடும் என்று.
" கருப்பு சாமீ .... இன்னைக்கு பார்த்து அது ஆயிட கூடாது ... இன்னும் கொஞ்சம் தள்ளி போடு. .. கோயிலுக்கு வந்து ஒரு எலுமிச்சை பழம் வாங்கி வைக்கிறேன் " என்று அவனுக்குரிய வட்டத்தில் வேண்டி கொண்டான் .
பள்ளிகூட மணி அடித்து. எட்டாம் வகுப்பு அரை நிக்கர் போட்ட பசங்கள் எல்லாம் "ஹோய்" என கூச்சலோடு தத்தம் பைகளை தூக்கிகொண்டு புழுதி கிளப்பிக்கொண்டு ஓடினர். சின்ராசு இயல்பாகவே யாரிடமும் அவ்வளவாக பேசி கொள்ள மாட்டான். அந்த வகுப்பில் வேடிக்கை விளையாட்டு எல்லாமே சின்ராசிடம்தான் நடக்கும். ஓடும்போது கால் சட்டையை இழுத்து விடுவார்கள். பல்லியை எடுத்து மேலே போட்டு விடுவார்கள். நோட்டு புத்தகத்தை ஒளித்து வைத்து விளையாடுவார்கள். அதனால் வகுப்பிற்கு வரவே மிகவும் பயப்படுவான் ராசு.
"டேய் ராசு. உன்ன கூட்டிட்டு போக உன் மாமா மோட்டருல வந்திருக்காருடா" என கத்தினான் ஒரு பையன்.
ராசுவிற்கு பகீர் என்றது.
எப்போதும் குதிரை வண்டியில் பக்கத்து தெரு பசங்கள் ஐந்து பேருடன் தான் போவான் ராசு.
தயக்கமாக பள்ளியின் இரும்பு கதவை விட்டு வெளியே வந்து பார்த்தான்.
மோட்டார் பைக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த அவன் மாமா அவனை கண்டதும் "ராசு, வாடா, சீக்கிரம் போலாம். எல்லாரும் உன்ன பார்த்திட்டு இருக்காக.... வா .. பாட்டிக்கு ரொம்ப உடம்புக்கு முடியலடா"
ராசுவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. "ஐயோ .. இன்னைக்கு பேய் கிழவிய பார்த்து தான் தீரணும் போல..." என மனதுக்குள் ஓடியது.
அவன் மோட்டாரில் ஏறி அமர்ந்து வீட்டுக்கு போவதற்குள் ....
அவன் பயத்துக்குரிய காரணத்தை பார்த்து விடுவோம்..
======================================================
ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பண்ணை வீட்டில்தான் ராசுவின் குடும்பம் வசித்து வந்தது .. ராசுவின் தந்தை கதிர்வேலு விவசாயம் பார்த்து வந்தார். அம்மா கலைவாணிக்கு வீடு மட்டுமே உலகம் . அவர்களின் ஒரே மகன் ராசு. அந்த வீட்டில் இன்னொரு நபரும் இருக்கிறார்.
அந்த நான்காவது நபர்தான் சொர்ணா பாட்டி.... அவளுக்கு ஊர் வைத்த பெயர் ......... "பேய் கிழவி "!
சொர்ணா பாட்டி அவள் சின்ன வயதில் இருந்தே மந்திர தந்திரங்களைக் கற்று வளர்ந்தவள்.
ஊரில் எதாவது பொருள் காணமல் போனாலோ .. அல்லது யாருக்காவது செய்வினை செய்ய வேண்டும் என்றாலோ ... அல்லது செய்வினை எடுக்க வேண்டும் என்றாலோ .. அவளிடம்தான் வருவார்கள் ஊர் மக்கள். ஆனால் பாட்டி மீது எல்லோருக்கும் பயம் இருந்தது. .. பில்லி சூன்யம் மற்றும் மாந்திரிக கலைகளை கேரளம் சென்று கற்று வந்தவள் என்று மக்கள் கூறுவார்கள்...
ராசுவிற்கு சின்ன வயசில் இருந்தே கிழவி என்றால் பயம். அவளுக்கு பார்வை வேறு கிடையாது என்று கூறுவார்கள். கிழவி வீட்டின் மேலே இருக்கும் ஒரு அறையில் தான் இருப்பாள். மாடிக்கு செல்லும் படிகள் தனியாக இருந்தன. கிழவியை பார்க்க வருபவர்கள் அந்த வழியாகதான் மேல சென்று பார்த்துவிட்டு வருவார்கள். கிழவி கீழ வர மாட்டாள். சாப்பாடு கூட ராசுவின் அம்மா போய் வைத்து விட்டு வந்துவிடுவாள். அவளும் மாடிக்கு பயந்து பயந்துதான் போவாள் .
கதிர்வேலுவிற்கு கிழவி செய்யும் காரியங்கள் துளி கூட இஷ்டம் இல்லை. ஆனால் வீடு மற்றும் அவர் விவசாயம் செய்யும் வயல் முதல்கொண்டு அவள் பெயரில் இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாமல் போனால் போகுது என்று விட்டு விட்டார்.
ராசு இதுவரை இரண்டு முறை தான் பாட்டியை பார்த்திருக்கிறான்... நினைவு தெரியாத சின்ன வயதில் .. பின்பு அவன் ஆறாவது படிக்கும்பொழுது ஒரு முறை...அது எப்படி என்றால்,
கிழவி ஏன் கீழே வர மாட்டேன் என்கிறாள் என்று ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு பயம் கலந்த ஆர்வம் இருந்தது.. அதுவும் பள்ளிகூடத்தில் வேறு "டே ராசு.. பேய் கிழவி என்னடா பண்ணுது.." "டேய்.. உனக்கும் மந்திரம் தெரியுமா " என்று அவனை கேலி செய்வார்கள்.
ஆதனால் எப்படியும் கிழவியை பார்த்து விட வேண்டும் என்று ஒரு நாள் அம்மா சாப்பாடு கொண்டு செல்லும் வரை பொறுத்து இருந்தான். அவள் கீழே வந்தவுடன் ... மெதுவாக மாடி படிகளை ஏறினேன்.. பழைய கால சிமெண்ட் படிகள் .. அங்கும் இங்கும் பெயர்ந்து இருக்க,.. கவனமாக ஏறி.. மேலே இருக்கும் குட்டிசுவருக்கு கீழே ஒளிந்து கொண்டு மெதுவாக எட்டி பார்த்தான். மாடியில் ஒரு ஒற்றை அறை மற்றும் இருந்தது.. கதவு பூட்டி இருக்க .. வெளிய தட்டில் சாப்பாடு மூடப்பட்டு ஒரு சிறிய முக்காலியில் வைக்கப்பட்டு இருந்தது.
கதவு மெதுவாக திறந்தது..
கிழவி வெளிய வந்தாள்.
சின்ராசுவின் நெஞ்சு பட பட என அடித்தது....
சிகப்பு நிற சேலையில் குள்ளமாக கருப்பு நிறத்தில் இருந்தாள்.. தலை முடி பஞ்சு போல வெளுத்து தொங்க.. முகத்தில் ஒரு பெரிய குங்கும பொட்டு வைத்து..
அந்த முகம் ..
முகம் முழுக்க அம்மை தழும்புகளுடன் தோல் சுருங்கி போய் விகாரமாக இருக்க, கண்கள் இரண்டும் கருவிழிகள் தெரியாமல் முழுதும் வெள்ளையாக இருந்தன.
ராசுவின் இதயமே நின்று விடும் போல இருந்தது.....கத்தாமல் இருப்பதற்காக கைகளை வைத்து வாயை இறுக்கமாக பொத்தி கொண்டான் ...
அதன் பிறகு ராசுவிற்கு மூன்று நாட்கள் குளிர் ஜுரம் வந்து விட்டது. பின்பு பல நாட்கள் அவன் தூங்கவே இல்லை. கண்ணை மூடினால் கிழவியின் அந்த கோரமான முகம் தன ஞாபகம் வந்தது.. அப்டியே தூங்கினாலும் பேய் கிழவி வந்து சிரிப்பது போலவும் .. அவனை எங்கயோ கூட்டிக்கொண்டு போவது போலவும் கொடுரமான கனவுகள் வந்தன..
அதன் பின்பு அவனுக்கு கருப்பு கோவிலுக்கு சென்று மந்திரித்து விட்டார்கள். பிறகு சில நாட்களில் இயல்பு நிலைக்கு மாறிவிட்டன.
அதன் பின்பு ஒரு வருடம் முன்பு .....
ஒரு நாள் அம்மா அப்பா பேசுவதை ஒளிந்து நின்று கேட்டான்.
"என்னங்க, இந்த கிழவி என்னமோ புதுசா ஏதோ பூசை பண்ண போகுதமா? 13 அம்மாவசை பண்ணுதுன்னு ஏதோ சொல்றாங்க.. என்னங்க இது.. இதுக்கு முடிவே கிடையாதா.. எம்புட்டு நாளு இந்த கொடுமைய அனுபவிக்கணும்.. மண்டைய போடா மாட்டேங்குதே"
"இல்ல கலை.. என்ன பண்ண... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. எப்படியும் நல்லது நடக்கும்.. அதுவரைக்கும் அனுபவிச்சுதான் ஆகணும். ஆத்தாக்காரி ஆகி போச்சே.. ..சொத்து வேற அது பேர்ல தான் இருக்கு.." இயலாமையில் பேசினார் கதிர்வேலு.
அதன் பிறகு விசித்திரமான சில நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.
இரவில் ராசு அப்பா அம்மாவுடன் தான் படுத்திருப்பான். அவர்கள் இருவரும் களைப்பில் சீக்கிரமே உறங்கி விடுவர். ராசு மேலே கூரையை பார்த்துக்கொண்டே பயத்துடன் படுத்திருப்பான்.. தூக்கம் வராமல் புரளுவான்... சரியாக அந்த கூரை மேலேதான் கிழவியின் அறை.
ஒரு நாள் (மூன்று மதங்களுக்கு முன்பு).
வழக்கம் போல விழித்துக்கொண்டு படுத்திருந்தான் ராசு. அப்பொழுது மாடியில் ஒரு சப்தம் கேட்டது..
தம் தம் தம் .......
காதை கூர்மை ஆக்கி கொண்டு ராசு கேட்க
யாரோ வட்டம் அடித்து ஓடுவது போல அந்த சப்தம் சுற்றி சுற்றி வந்ததது..
ராசு போர்வையில் முகத்தின் மேல போர்த்திக்கொண்டு நடுக்கமாக படுத்துக்கொண்டான்..
ஜல் ஜல் என சலங்கை ஓசை வேறு கேட்க..
ராசு அப்பாவை எழுப்ப பார்க்க.. அவரோ இருந்த களைப்பில் குறட்டை விட்டு தூங்கிகொண்டிருந்தார்..
பின் கிழவி ஏதோ மந்திரம் சொல்வது போல குரல் எழுந்தது..
அதன் பிறகு ரத்தத்தை உறைய செய்யும் ஒரு சிரிப்பொலி கேட்டது ...ஆணா பெண்ணா என இனம் பிரிக்க முடியாத ஒரு குரல்.
ராசுவிற்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. ராசு அன்று தூங்கவே இல்லை..
பின் வரும் இரவுகளில் அந்த நிகழ்வுகள் இன்னும் மோசமாக ஆரம்பித்தது..
வினோதமான சப்தங்களும், உறுமல்களும் அழுகுரல்களும் கேட்டு கொண்டே இருந்தன.
ராசு அம்மா அப்பாவிடம் அதை பற்றி கூறியும், அவர்களால் ஒன்று செய்ய இயலாமல் தவித்தார்கள்.
பின்பு ஒரு நாள் திடீர் என சப்தம் கேட்பது நின்று போக ... அமைதியாக கழிந்தன சில இரவுகள்.
அடுத்த நாள் அப்பா அம்மாவிடம் சொல்லுவதை கேட்க நேர்ந்தது சின்ராசுவிற்கு,,,,
"கலை.. கிழவிக்கு ரொம்ப உடம்பு முடியல .. படுத்துட்டே இருக்கு.. "
"ஆமாங்க.. நான் போய் வச்ச சோறு கூட அப்படியே இருக்கு.. உள்ள போக பயமா இருக்கு. "
"நான் போய் பாத்துட்டு வந்தேன்.. பேச முடில.. வைத்தியர கூட்டீயறேன் புள்ள ..."
கதிர்வேலு சைக்கிளில் சென்று வைத்தியரை கூட்டி வர. இருவரும் மேலே செல்வதை ஒளிந்து இருந்து பார்த்தான் ராசு.
பின் சிறிது நேரம் கழித்து வைத்தியரும் அவன் அப்பாவும் அம்மாவும் பேசுவதை கேட்டான்..
"ரெண்டு மூணு நாளுக்கு மேல தாங்காதுங்க ..சொல்றவங்களுக்கு சொல்லிடுங்க. " என்றார் வைத்தியர்..
அவர் போன பிறகு...
"கலை.. என்ன பண்ணலாம்? கிழவி போய்டும் போல இருக்கு."
"அப்பாடி.. நான் கும்புடுற தெய்வம் கை விடல.. நம்ம பட்ட கஷ்டமெல்லாம் போகட்டும்.. நிம்மதியா போய் சேரட்டும் .. ஊருக்குள்ள போக முடில...வீட்டுக்கு கூட யாரும் வர பயப்படறாங்க...."
" ம்ம் என்ன பண்ண .. எனக்கு சந்தோசமாவும் இருக்கு .. ஆனா பெத்துபோட்ட கிழவி ஆச்சே.. அதன் கொஞ்சம் கலக்கம்.. "
ராசுவிற்கு இதை கேட்டதும் மிகவும் சந்தோசமாக இருந்தது.
"சரி அப்போ நம்ம சனத்துக்கெல்லாம் சொல்லிரலாமா..." கேட்டாள் கலை.
"எவன் வருவான் வீட்டுக்கு? கிழவி செத்தாலும் யாரும் வர மாட்டாங்க. அப்படி பயப்படுத்தி வச்சிருக்கு. உன் தம்பி குடும்பம் மட்டும்தான் நமக்கு இப்போதைக்கு சொந்தம். அவங்ககிட்ட சொல்லிடு. " என்றார் கதிர்வேலு.
"அம்மாடி .. பேய் கிழவி தொல்லை ஒரு வழியா ஒழிஞ்சுடும் போல இருக்கு" என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அந்த அதிர்ச்சி நடந்தது.
கதிர்வேலு "ஆனா பாரு கலை.. கிழவி கீழ வந்ததே இல்ல.. ராசு பொறந்ததுல இருந்து அவன ஒரு தடவதான் தூக்கி பாத்திருக்கு.. ஆனா ராசு ராசு ன்னு மட்டும் முனங்குது ..சாகறதுக்கு முன்னாடி ஏதோ சொல்ல நினைக்குது போல.. " என்றார்..
" ஏங்க.. ஏற்கனவே அவன் அத பார்த்துட்டு பயந்து போய் இருக்கான் .. வேணாங்க... "
"இல்ல கலை.. கடைசியா கேட்டுச்சுன்னு வைய்யு. அத நிறைவேத்தாம விட்டோம்னா... கிழவி சாபம் விட்டாலும் விட்டுடும்.. எதுக்கு வம்பு. "
ராசுவிற்கு இதயம் ஒரு முறை நின்று துடித்தது..
"ஐயோ.. இன்னொரு தடவை அந்த கிழவி முகத்தை பாத்துபுட்டா அம்புட்டுதான். இனி தூங்கவே முடியாதே. சாமி.தயவு செஞ்சு நான் பள்ளிகொடம் போகும்போதே கிழவிய கூட்டிகிட்டு போய்டப்பா.." என வேண்டி கொண்டான்.
அடுத்த இரண்டு நாட்கள் தப்பித்து விட்டான்.
அதற்கு அடுத்த நாள்...
================================================
மோட்டாரில் போகும்போது ராசுவின் மனம் திடுக் திடுக் என அடித்துகொண்டது. "ஐயோ சாமி . என் கூட இருந்து காப்பாத்து" என மனமுருக வேண்டிகொண்டான்.
தட தட என குலுங்கி சென்ற வண்டி அவன் வீட்டை நெருங்கி ஒரு வட்டம் அடித்து நின்றது..
"இறங்கு ராசு.. " என்றார் அவன் மாமா.
வீட்டின் முன் கதிர்வேலுவும் கலையும் மற்றும் அவன் அத்தையும் நின்று கொண்டிருந்தனர். அனைவர் முகத்திலும் ஒரு போலியான சோகம் அப்பி இருக்க...
ராசு மெதுவாக மோட்டாரில் இருந்து இறங்கினான்.
"ராசு.. வாடா.. பாட்டிக்கு ரொம்ப முடிலப்பா.. கடைசியா ஒரு தடவ உன்ன பாக்க ஆசைப்படுது. வா ராசா " என்றார் கதிர்வேலு.
"மாட்டேன் மாட்டேன்.. எனக்கு பயமா இருக்கு... அம்மா " என்று கலைவாணியிடம் சென்று ஒட்டி கொண்டான் ராசு.
"டேய் பாவம் பாட்டி . வா நாங்க கூட வாரோம்" என்று அவனை மெதுவாக தள்ளி கொண்டு மாடிப்படி அருகில் சென்றனர் அனைவரும்.
"ம்ம்ம் ம்ம்ம் " என்று தலை ஆட்டியபடி சென்ற ராசுவை இறுக்கமாக கையை பிடித்து இருந்தாள் அம்மா கலை.
அந்த மாடிப்படி ஒவ்வொன்றாக ஏற ஏற ... ராசுவின் இதயத்துடிப்பும் எகிறியது. .. மேல இருந்த அறை மெதுவாக அவன் கண்களுக்கு தென்பட்டது.. ஒரு சிங்கத்தின் குகை போல அது தெரிந்தது.
ஒரு வழியாக அந்த முடிவடையாத மாடிப்படி பயணம் முடிவுற்று.. ...
அந்த அறை தெரிந்தது. அறை கதவு திறந்து இருக்க...
"வா ராசு. வா.. பாட்டி உள்ளாரதான் இருக்கு." என விடாபிடியாக கலை அவனை இழுக்க, கால்கள் தேய்ந்துகொண்டே அறைக்குள் கொண்டுவரப்பட்டான்.
உள்ளே....
அதை அறை என்று சொல்வதை விட குகை போல இருந்தது..
விசித்திரமான் பல பொருட்கள் அங்கும் இங்கும் இறைந்து கிடந்தன.. பூஜைக்கு பயன்படும் பூக்கள் முதற்கொண்டு, தேங்காய், காய்ந்த மாலைகள், கனிகள் என சிதறி கிடந்தன. சில அடுக்குகளில் கண்ணாடி குப்பிகளில் பல வண்ணங்களில் திரவ பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுவர்களில் கொடுரமான பெயர் தெரியாத கடவுள் படங்கள் தொங்கி கொண்டிருந்தன. மற்றும் ஆணி அடித்து அதில் வண்ண கயிறுகள் தொங்க விடப்பட்டிருந்தன.
அறையின் ஓரத்தில், தரையில் சுண்ணாம்பால் ஒரு சிறிய வட்டம் இடப்பட்டு அதில் ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.
அதை பார்த்ததும் ராசுவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது ....
அறையின் நடுவில் .....
ஒரு கயற்று கட்டில் போடப்பட்டு .. அதில்
பேய்க் கிழவி எனும் சொர்ணா பாட்டி படுத்து இருந்தாள்.
ராசு கண்களை இருக்க மூடி கொண்டவன்.. மெதுவாக திறந்து பார்க்க..
இரண்டு வருடம் முன்பு பார்த்ததிற்கு இபொழுது மிகவும் இளைத்து போய் இருக்க. கை கால்கள் எலும்பும் தோலுமாக தெரிய.
அந்த முகம் ...
சுருக்கங்கள் இன்னும் அதிகமாகி.. தலை மயிர் கொட்டி போய்... தழும்புகள் மட்டும் பிரதானமாக தெரிய.. கண்கள் நல்ல வேளையாக மூடி இருந்தன.
மூச்சு லேசாக வந்து கொண்டிருக்க. நெஞ்சு மெதுவாக மேல கீழே இறங்கி கொண்டிருந்தது.
கதிர்வேலு உடனே "ஆத்தா, பாரு ராசு வந்திருக்கான்.. கூட்டியார சொன்னியே, பாரு ஆத்தா" என சோகம் கலந்த குரலில் சொல்ல..
கிழவியின் கண்கள் மெதுவாக திறந்தன.
கருவிழிகள் இல்லாமல் வெள்ளையாக இருந்த கண்கள் அங்கும் இங்கும் விழித்தன.
"ராசு ராசு ...."
"இங்க இருக்கான் பாரு ஆத்தா." என்று ராசுவை இழுத்து கலை முன்னால் விட ....
கிழவியின் கைகள் நீண்டு ராசுவின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள .....
ராசு இழுக்க பார்த்தும் முடியவில்லை.....வியர்த்து ஒழுகியது அவனுக்கு..
"ராசு.. பாட்டி உன்ன பார்த்ததே இல்லப்பா.. பாட்டிக்குதான் கண்ணு தெரியாதே.. " என ஒரு கட்டை குரல் கிழவியின் தொண்டையில் இருந்து வந்தது.. குரல் நடுக்கமாக இருந்தாலும் மட்டும் மிகவும் கம்பீரமாக இருந்தது.
"ஆத்தா ராசுவ நல்லா ஆசிர்வாதம் பண்ணு ..நல்லபடியா படிச்சு முன்னேறட்டும்.. " என்றார் கதிர்வேலு.
"சரி கதிரு. நீங்க ரெண்டு பெரும் வெளிய இருக்கியளா.. நான் அவனுக்கு மந்திரிச்சு விடணும்.. " என்று கிழவி நடுக்கமான குரலில் சொல்ல..
ராசுவிற்கு பகீர் என்று உரைக்க..
"ஆத்தா அது வந்து ... அவன் ரொம்ப பயப்படறான்" என கதிர்வேலு இழுத்தார்.
"ம்ம்ம் என்னது.. ?" என்ற கிழவி ஒரு முறை முறைத்தாள்.
"சரி ஆத்தா.. கலை, வா புள்ள நாம கொஞ்சம் வெளிய இருப்போம்" கதிர்வேலு தயக்கமாக கலையுடன் மெதுவாக வெளியே சென்றார்.
ராசு "அப்பா அப்பா.." என கத்தியும் கிழவியின் பிடி இரும்பு பிடியாக இறுக, செய்வது அறியாமல் கண்களை இறுக்கமாக மூடி கொண்டான்..
"ராசு பயப்படாதே. என்ன பாரு ராசா.. " என்ற கிழவியின் குரலில் இப்பொழுது நடுக்கம் இல்லை..
ராசு மெதுவாக கண்களை திறந்து பார்க்க. கிழவியின் வெளுத்த கண்கள் இப்பொழுது அவனையே பார்ப்பது போல நிலைகுத்தி நின்றன.. அவளிடம் இப்பொழுது ஒரு புத்துணர்வு வந்து இருந்தது.. அந்த வெளுத்த கண்களில் ஒரு பச்சை ஒளி மிளிர்ந்து மறைந்தது.
"பாட்டி.. என்ன விடு. .நான் போணும்... " என்று அழாக்குறையாக கெஞ்சினான்.
"ராசா.. எங்க போற ..நீ இனி எங்கயும் போக முடியாது.. என்னோட மட்டும்தான் இருப்ப..." என்று கிழவி சிரித்தபோது, முன்வரிசையில் பல பற்கள் காணாமல் போய் இரண்டு மூன்று பற்கள் மட்டும் கறையோடு இருந்தன.
"விடு விடு. என்ன .. என்ன சொல்ற நீ... அம்மா " என கத்தினான் ராசு..
கிழவி முகம் இறுகி,
"ஆமா ராசு.. நான் சொல்றத நல்லா கேளு.. எனக்கு சாவே கிடையாது. 13 அம்மாவசை துர்தேவதைகளுக்கு பூச பண்ணி ரத்த காவு கொடுத்துட்டேன். இனி 200 வருஷம் என் ஆன்மா உயிரோட இருக்கும். ஆனா பாழப்போன இந்த உடம்பு தாங்காது ராசா.. அதனால...."
இப்போது கிழவியின் கண்கள் அவனை உற்று நோக்குவது போல தோன்ற.. திடீர் என மந்திரத்தில் கட்டுண்டது போல ராசு சமைந்து நின்றான்..
பச்சை ஒளி ஒரு கீற்று போல கண்களில் இருந்து கிளம்பியது...
=====================================
உள்ளே ஏதோ சப்தம் கேட்டதும் பதறி போய் கதிர்வேலுவும் கலையும் ஓடி வந்து
பார்த்த போது, அங்கே....
கட்டிலில் கிழவியின் உடல் தளர்ந்து போய் கிடந்தது.. தலை தோய்ந்து போய் கிடக்க..
"ஆத்தா போய்ட்டியே" என்று கதிர்வேலு அழ தொடங்கினார். கலையும் அதில் கலந்து கொண்டாள்.
ஓரமாக நின்ற ராசுவை அவர்கள் கவனிக்கவில்லை..
அவன் தரையை பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான்
அவன் உதட்டில் ஒரு புன்னகை ஒட்டி இருந்தது.. .
கண்களில் ஒரு பச்சை ஒளி மிளிர்ந்து மறைந்தது ..
சின்ராசு இனி எதற்கும் பயப்பட மாட்டான்!!
===========================நிறைவு===========================
( ஒரு குறுங்கதை by Vazzy )
Monday, April 25, 2011
திரிபுக்காட்சி - ஒரு குறுங்கதை = By Vaz "
கண்டிப்பாக இன்று போருக்கு போக வேண்டுமா ...." தயக்கத்துடன் கேட்ட அரசியை, உக்ரமாக பார்த்தேன்.
"என்ன கயல்விழி, நான் இட்ட கட்டளைகளுக்கு அனைத்து குறுநில மன்னர்களும் தலை வணங்கி விட்டனர். அந்த மகேந்திர வர்மன் மட்டும் முரண்டு பிடிக்கிறான். பின் இந்த குலோத்துங்கன் வார்த்தைகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது.. இன்று அவன் குருதி நிலத்தில் சிந்தும்." என்றேன் ஆத்திரத்துடன்.
" பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடித்து கொள்ளலாமே " என்றாள் அரசி.
" அனைத்து வாய் வாக்குகளும் முற்று பெற்று விட்டன. இன்று கடைசியாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளேன். அதற்கு அவன் செவி சாய்க்காவிடில், அவன் குறுநிலம் இருக்காது. அவனும் இருக்க மாட்டான். படைகளை தயார் செய்ய கூறி விட்டேன். " என்ற நான், அவள் தந்த பழ ரசத்தை வேகமாக அருந்தினேன்.
"சரி அரசி. சபை கூடி விட்டது. வருகிறேன். பிள்ளைகளை பார்த்து கொள்."
"சரி மன்னவா, சென்று வாருங்கள்." என்று அரசி வழியனுப்பினாள்.
அந்தபுரத்தை விட்டு வெளியேறினேன். காவலர்கள் வேல்கம்புகளை சாய்த்து வணங்கினர். அரசவையை நோக்கி நடந்தேன்.
"மன்னர் வருகிறார் பராக் " என உச்ச ஸ்ததியில் சேவகன் கூவ .... என் உடைவாளை சரி செய்தபடி சபைக்குள் நுழைந்தேன்.
அரசவையில் அமர்திருந்த அனைவரும் அவசரமாக எழுந்து நிற்க, மிடுக்குடன் என் சிம்மாசனத்தை நோக்கி நடந்தேன் ..
சிம்மாசனம் செல்லும் பாதை முழுதும் சிவப்பு கம்பளம் விரிக்கபற்றிருக்க, இருபுறமும் மாதர்கள் மலர்கள் தூவினர். நடைபாதையை புஷ்பங்கள் நிறைத்திருந்தன ...
இருபுறமும் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள், மற்றும் போர்ப்படை தளபதிகள் அனைவரும் பய்வமாக எழுந்து நின்றனர்.
அனைவரையும் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு என் அரியணையை நெருங்கினேன்.
இருபுறமும் இருந்து "வணக்கம் மன்னவா " " வந்தனம் மன்னர் மன்னா" என வாழ்த்து குரல்கள் எழும்பிய வண்ணம் இருந்தன.
படிகளில் ஏறி அரியணையில் அமர்ந்தேன். இருபுறமும் சாமரங்களை வீசியபடி பெண்கள்....
என் நம்பிக்கைக்கு பாத்திரமான அமைச்சர் பொற்கொற்றனார் என்னை வணங்கி அருகில் வந்தார்.
"அமைச்சரே, இன்று என்ன செய்தி? நாட்டு மக்கள் நலமுடன் உள்ளார்களா? போர்களத்தில் இருந்து என்ன தகவல் உள்ளது? " என வினவினேன்.
"மன்னர் மன்னா, அரசன் மகேந்திர வர்மன் தங்கள் கட்டளைக்கு அடிபணிய மறுக்கிறான். நம் நாட்டு எல்லையில் முப்படைகளை குவித்துள்ளான்.
போர் மூளும் அபாயம் உள்ளது. ஆகையால், மக்கள் பீதியுடன் இருக்கின்றனர்."
என் விழிகள் கோபத்தில் சிவக்க "என்ன ஒரு தைரியம் அவனுக்கு. என்னையே எதிர்க்க திராணி வந்து விட்டதா? இன்று அவன் தலை தலையில் உருளும். அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். கூப்பிடுங்கள் தளபதியை" என்று இரைந்தேன்.
"வந்து விட்டேன் மன்னா, " என்று பணிந்தவாறே வந்தான் முப்படை தளபதி இளஞ்செழியன்.
"படைகள் தயார் நிலையில் உள்ளனவா?"
"ஆம் மன்னா. உங்கள் குறிப்பறிந்து போர்வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் "
"வாருங்கள். படைகளை ஆய்வு செய்வோம் " என எழுந்தேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போர்க்களம்.
புழுதியை கிளப்பியபடி எங்கள் புரவிகள் நுழைந்து, கனைத்தபடி கால்களை உயர்த்தி நின்றன. நானும் தளபதியும் இறங்கி கம்பீரமாக நடந்தோம் வீரர்களை நோக்கி.
எங்கள் வருகையை கண்ட போர்வீரர்கள் அனைவரும் விரைப்பாகினர். கவசம் அணிந்து வேல்கம்பு மற்றும் போர்வாள் ஆகியவற்றை இறுக்கமாக பிடித்தபடி நெஞ்சை நிமிர்த்தியபடி உறுதியாக நின்றனர். ஒருபுறம் குதிரைகளின் மேல் வீரர்கள், இன்னொரு புறம் யானை படை என கண்ணுக்கெட்டிய தூரம் வரை என் படை தெரிந்தது.
"மன்னா, 750 வாரணங்கள், 500 குதிரைகள், தரைப்படை வீரர்கள் என எண்ணிக்கை பல ஆயிரம். வெற்றி நமதே " என்றான் தளபதி.
"நல்லது தளபதி. நமது போர் தந்திரங்களை நன்றாக கற்பித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்"
"ஆம் மன்னா. அனைவரும் எதிரியை தோற்கடிப்பதில் முனைப்புடன் உள்ளனர்."
"நன்று நன்று. எனது கவசத்தை அணிந்து விடுங்கள் " என கூறி என் கைகளை விரிக்க, என் பின்னே வந்து ஒரு சேவகன் மார்புக்கவசத்தை மாடி விட்டான். என் போர்வாளை ஒரு முறை சரி பார்த்து கொண்டேன்.
"என் புரவியை கொண்டு வாருங்கள்" என கட்டளை இட்டேன்.
குளம்போசையுடன் என் வெண்ணிற புரவியான மின்னல் வந்தது.
ஒரு படை வீரன், புரவியை பிடித்து கொள்ள, அதனை நோக்கி நடந்தேன் ... அப்பொழுது ...
படை வீரர்களுக்கு நடுவில் இருந்து ஒருவன், வெள்ளை நிற உடை அணிந்து தனியாக தெரிந்தான், அவன் கையில் ஒரு கொம்பு இருந்தது.. அவன் திடீர் என அதை சுழற்றிய படி என்னை நோக்கி வர...
"யார் இவன்.. தளபதி என்ன இது.. அவனை பிடியுங்கள். அவன் என்னை கொல்ல வரும் ஒற்றன்" என இறைந்தேன்.
தளபதி மற்றும் வீரர்கள் சிலை போல நிற்க, அவன் என்னை நெருங்கி , அந்த கொம்பால் என் கால்களில் வேகமாக தாக்கினான்.
"ஆஆஆஆ" என் உலகில் இருள் சூழ்ந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"யோவ் வேலு, ஏன்யா அந்த பெருச போட்டு இந்த அடி அடிக்ற, மண்டைய போட்ற போதுபா"
"அட போய்யா. நேத்து அட்மிட் ஆன கேசுப்பா. ஜெனரல் வார்டுல போட்டுருகானுங்க. அதுக்கு ஏதோ ராசான்னு நினைப்பு .. ஆ ஊன்னா சண்டைக்கு போறேன், குதிரைல ஏறுறேன்னு வார்ட்ட வுட்டு ஓடி போய்டுது. அதான் நல்லா ஒன்னு வச்சேன். யப்பா, இந்த மறை கழண்ட கேஸ்களோட ஒரே பேஜாருப்பா. சீக்ரம் வேற வேலைய பாக்கணும். சரி சரி, க்வாட்டருக்கு காசு இருக்குள்ள.. "
பேசியபடி நடந்தனர் அந்த மன நல காப்பகத்தின் காவலாளிகள்.
END _____________________________________
குறிப்பு:
(திருபுக்காட்சி என்பது delusion என்ற ஆங்கில வார்த்தைக்குரிய தமிழ் சொல். அதை தெரிந்தவர்கள் உடனே கதையின் முடிவை கண்டிருக்கலாம்! Schizophrenia எனும் மனச்சிதைவு நோயின் ஒரு கட்டத்தில் சில நோயாளிகளுக்கு grandiose delusional disorder எனும் ஒரு நோய்க்குறி வருவது உண்டு. அதை சிறிது திரித்து கற்பனை கலந்த முயற்சி இது!). மேலும் அறிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும். http://www.webmd.com/schizophrenia/guide/delusional-disorder.
"என்ன கயல்விழி, நான் இட்ட கட்டளைகளுக்கு அனைத்து குறுநில மன்னர்களும் தலை வணங்கி விட்டனர். அந்த மகேந்திர வர்மன் மட்டும் முரண்டு பிடிக்கிறான். பின் இந்த குலோத்துங்கன் வார்த்தைகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது.. இன்று அவன் குருதி நிலத்தில் சிந்தும்." என்றேன் ஆத்திரத்துடன்.
" பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடித்து கொள்ளலாமே " என்றாள் அரசி.
" அனைத்து வாய் வாக்குகளும் முற்று பெற்று விட்டன. இன்று கடைசியாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளேன். அதற்கு அவன் செவி சாய்க்காவிடில், அவன் குறுநிலம் இருக்காது. அவனும் இருக்க மாட்டான். படைகளை தயார் செய்ய கூறி விட்டேன். " என்ற நான், அவள் தந்த பழ ரசத்தை வேகமாக அருந்தினேன்.
"சரி அரசி. சபை கூடி விட்டது. வருகிறேன். பிள்ளைகளை பார்த்து கொள்."
"சரி மன்னவா, சென்று வாருங்கள்." என்று அரசி வழியனுப்பினாள்.
அந்தபுரத்தை விட்டு வெளியேறினேன். காவலர்கள் வேல்கம்புகளை சாய்த்து வணங்கினர். அரசவையை நோக்கி நடந்தேன்.
"மன்னர் வருகிறார் பராக் " என உச்ச ஸ்ததியில் சேவகன் கூவ .... என் உடைவாளை சரி செய்தபடி சபைக்குள் நுழைந்தேன்.
அரசவையில் அமர்திருந்த அனைவரும் அவசரமாக எழுந்து நிற்க, மிடுக்குடன் என் சிம்மாசனத்தை நோக்கி நடந்தேன் ..
சிம்மாசனம் செல்லும் பாதை முழுதும் சிவப்பு கம்பளம் விரிக்கபற்றிருக்க, இருபுறமும் மாதர்கள் மலர்கள் தூவினர். நடைபாதையை புஷ்பங்கள் நிறைத்திருந்தன ...
இருபுறமும் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள், மற்றும் போர்ப்படை தளபதிகள் அனைவரும் பய்வமாக எழுந்து நின்றனர்.
அனைவரையும் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு என் அரியணையை நெருங்கினேன்.
இருபுறமும் இருந்து "வணக்கம் மன்னவா " " வந்தனம் மன்னர் மன்னா" என வாழ்த்து குரல்கள் எழும்பிய வண்ணம் இருந்தன.
படிகளில் ஏறி அரியணையில் அமர்ந்தேன். இருபுறமும் சாமரங்களை வீசியபடி பெண்கள்....
என் நம்பிக்கைக்கு பாத்திரமான அமைச்சர் பொற்கொற்றனார் என்னை வணங்கி அருகில் வந்தார்.
"அமைச்சரே, இன்று என்ன செய்தி? நாட்டு மக்கள் நலமுடன் உள்ளார்களா? போர்களத்தில் இருந்து என்ன தகவல் உள்ளது? " என வினவினேன்.
"மன்னர் மன்னா, அரசன் மகேந்திர வர்மன் தங்கள் கட்டளைக்கு அடிபணிய மறுக்கிறான். நம் நாட்டு எல்லையில் முப்படைகளை குவித்துள்ளான்.
போர் மூளும் அபாயம் உள்ளது. ஆகையால், மக்கள் பீதியுடன் இருக்கின்றனர்."
என் விழிகள் கோபத்தில் சிவக்க "என்ன ஒரு தைரியம் அவனுக்கு. என்னையே எதிர்க்க திராணி வந்து விட்டதா? இன்று அவன் தலை தலையில் உருளும். அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். கூப்பிடுங்கள் தளபதியை" என்று இரைந்தேன்.
"வந்து விட்டேன் மன்னா, " என்று பணிந்தவாறே வந்தான் முப்படை தளபதி இளஞ்செழியன்.
"படைகள் தயார் நிலையில் உள்ளனவா?"
"ஆம் மன்னா. உங்கள் குறிப்பறிந்து போர்வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் "
"வாருங்கள். படைகளை ஆய்வு செய்வோம் " என எழுந்தேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போர்க்களம்.
புழுதியை கிளப்பியபடி எங்கள் புரவிகள் நுழைந்து, கனைத்தபடி கால்களை உயர்த்தி நின்றன. நானும் தளபதியும் இறங்கி கம்பீரமாக நடந்தோம் வீரர்களை நோக்கி.
எங்கள் வருகையை கண்ட போர்வீரர்கள் அனைவரும் விரைப்பாகினர். கவசம் அணிந்து வேல்கம்பு மற்றும் போர்வாள் ஆகியவற்றை இறுக்கமாக பிடித்தபடி நெஞ்சை நிமிர்த்தியபடி உறுதியாக நின்றனர். ஒருபுறம் குதிரைகளின் மேல் வீரர்கள், இன்னொரு புறம் யானை படை என கண்ணுக்கெட்டிய தூரம் வரை என் படை தெரிந்தது.
"மன்னா, 750 வாரணங்கள், 500 குதிரைகள், தரைப்படை வீரர்கள் என எண்ணிக்கை பல ஆயிரம். வெற்றி நமதே " என்றான் தளபதி.
"நல்லது தளபதி. நமது போர் தந்திரங்களை நன்றாக கற்பித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்"
"ஆம் மன்னா. அனைவரும் எதிரியை தோற்கடிப்பதில் முனைப்புடன் உள்ளனர்."
"நன்று நன்று. எனது கவசத்தை அணிந்து விடுங்கள் " என கூறி என் கைகளை விரிக்க, என் பின்னே வந்து ஒரு சேவகன் மார்புக்கவசத்தை மாடி விட்டான். என் போர்வாளை ஒரு முறை சரி பார்த்து கொண்டேன்.
"என் புரவியை கொண்டு வாருங்கள்" என கட்டளை இட்டேன்.
குளம்போசையுடன் என் வெண்ணிற புரவியான மின்னல் வந்தது.
ஒரு படை வீரன், புரவியை பிடித்து கொள்ள, அதனை நோக்கி நடந்தேன் ... அப்பொழுது ...
படை வீரர்களுக்கு நடுவில் இருந்து ஒருவன், வெள்ளை நிற உடை அணிந்து தனியாக தெரிந்தான், அவன் கையில் ஒரு கொம்பு இருந்தது.. அவன் திடீர் என அதை சுழற்றிய படி என்னை நோக்கி வர...
"யார் இவன்.. தளபதி என்ன இது.. அவனை பிடியுங்கள். அவன் என்னை கொல்ல வரும் ஒற்றன்" என இறைந்தேன்.
தளபதி மற்றும் வீரர்கள் சிலை போல நிற்க, அவன் என்னை நெருங்கி , அந்த கொம்பால் என் கால்களில் வேகமாக தாக்கினான்.
"ஆஆஆஆ" என் உலகில் இருள் சூழ்ந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"யோவ் வேலு, ஏன்யா அந்த பெருச போட்டு இந்த அடி அடிக்ற, மண்டைய போட்ற போதுபா"
"அட போய்யா. நேத்து அட்மிட் ஆன கேசுப்பா. ஜெனரல் வார்டுல போட்டுருகானுங்க. அதுக்கு ஏதோ ராசான்னு நினைப்பு .. ஆ ஊன்னா சண்டைக்கு போறேன், குதிரைல ஏறுறேன்னு வார்ட்ட வுட்டு ஓடி போய்டுது. அதான் நல்லா ஒன்னு வச்சேன். யப்பா, இந்த மறை கழண்ட கேஸ்களோட ஒரே பேஜாருப்பா. சீக்ரம் வேற வேலைய பாக்கணும். சரி சரி, க்வாட்டருக்கு காசு இருக்குள்ள.. "
பேசியபடி நடந்தனர் அந்த மன நல காப்பகத்தின் காவலாளிகள்.
END _____________________________________
குறிப்பு:
(திருபுக்காட்சி என்பது delusion என்ற ஆங்கில வார்த்தைக்குரிய தமிழ் சொல். அதை தெரிந்தவர்கள் உடனே கதையின் முடிவை கண்டிருக்கலாம்! Schizophrenia எனும் மனச்சிதைவு நோயின் ஒரு கட்டத்தில் சில நோயாளிகளுக்கு grandiose delusional disorder எனும் ஒரு நோய்க்குறி வருவது உண்டு. அதை சிறிது திரித்து கற்பனை கலந்த முயற்சி இது!). மேலும் அறிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும். http://www.webmd.com/schizophrenia/guide/delusional-disorder.
Tuesday, March 29, 2011
Nil Gavane Sellathey.. A review Vaz
Starts off promisingly and before you know it, you start feeling nostalgic. The fact that you are watching " Texas Chainsaw Massacre" the 2003 version and (which itself is a remake of the 1974 Tobe Hooper's titular slasher flick) hits you.. A group of friends going on a vacation trip are being knocked off one by one.. who or what are the killers? Technically the movie is sound with crisp editing by Mathan GunaDeva and J Lakshman handles the cinematography capturing the dry atmosphere well. The cast comprising of the director Anand Chakravarthy, Dhansika and co. pass muster as they have not much to do, except run around screaming. Background score and mix are good by Selvaganesh, though none of the songs stick to your mind. The flashback sequence is believable and is the best part of the film. Overall, an okay flick if you havent seen the original, but not for hardcore horror fans of hollywood.
(PS: Should have listed Tobe Hooper in credits :) )
Monday, March 21, 2011
முடிவு - ஒரு குறுங்கதை by Vaz
கி பி 3011.
அந்த 500 அடுக்கு மாடி கட்டிடத்தின் 345 எண் வீட்டில் உள்ள வரவேற்பறையில் அமர்திருந்தான் ரீவா, அருகில் அவன் தங்கை மகி....
எதிரே 100 அடி சதுர நீர்ம படிக ஒளிக்காட்சி திரையில் விளம்பரங்கள் ஓடி கொண்டிருந்தன .....
" வியாழன் கோளில் சுற்றுலாவிற்கான கட்டணம் 30 % குறைப்பு ..." " புதிய 100000 கிகா எண்பிட்டு கொள்ளடக்க தகடுகள் அறிமுகம் "
ஆனால் அதில் மனம் லயிக்காமல் யோசனையில் ஆழ்த்திருந்தான் ரீவா...
அருகில் மகி நிகழ் பட கருவியின் தொடு திரையில் எதையோ அழுத்தி கொண்டிருந்தாள்.
மின்னணு நாய்க்குட்டி பொம்மை ஒன்று அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தது.
"போகலாம் .. நான் தயார்" என்று குரல் கேட்டது ... ரீவா எழுந்து திரும்பி பார்க்க.
அவன் தந்தை மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் ...
"அப்பா " என்று தயங்கி பேசினான் ரீவா.
"ஊர்திக்கு சொல்லி விட்டாயா ரீவா ".... தந்தை வினவ
"ஆயிற்று .. இதோ வந்து விடும் "....
"அப்பா " என்று மகி எழுந்து அவரை கட்டி கொண்டாள்..
"சரி மகி நான் வருகிறேன் .. " அவளை நெற்றியில் முத்தமிட்டு விலக்கினார் தந்தை.. அவள் கண்களில் நீர் கோர்த்து .. "பார்த்து செல்லுங்கள் அப்பா" என்றாள்.
நாய்க்குட்டி தன் உலோக வாலை சுழற்றி "பௌ" என்றது ...
தந்தை அதை பார்த்து கை அசைத்தார் .. "வருகிறேன் நீரோ "
வெளியே குழல் ஊது சப்தம் ஒலிக்க..
ரீவா "ஊர்தி வந்து விட்டது அப்பா " என்றான்.
தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் கதவுகள் பிளந்து கொள்ள ..
முட்டை வடிவ பறக்கும் ஊர்தி நின்று கொண்டிருந்தது .. ஓட்டுனர் உள்ளே ஒரு விசையை இழுக்க.. கதவுகள் திறந்து பறவை போல் விரிந்து நின்றது.
தந்தை திரும்பி வீட்டை சுற்றில் ஒரு முறை பார்த்து விட்டு .. வாகனத்திற்குள் ஏறி அமர்ந்தாள் ..... கூடவே ரீவாவும் அமர்ந்தான் ...
"எங்கு செல்ல வேண்டும் " வினவினான் ஓட்டுனர்.
"அரசாங்க கட்டிட எண் 887 " என்று ரீவா பதில் அளித்தான்.
ஓட்டுனர் தொடு திரையில் எண்களை பதிக்க ... கதவுகள் மூடி கொண்டு ... குளிர் சாதனம் இயங்கதொடங்கியது.... கண்ணாடி கதவில் மகி மற்றும் நீரோ நின்றது தெரிய.. கை அசைத்தார் தந்தை.. கை மற்றும் வால் பதிலுக்கு அசைவது தெரிந்தது ...மெல்லிய உறுமலுடன் அந்த காற்றழுத்த வாகனம் வட்டம் அடித்து கிளம்பியது..
விண்ணை முட்டும் கட்டிடங்கள் ஊடொளி பிம்பங்களின் ஒளியில் பிரம்மாண்டமாக நின்றன.. முழுமைப் படிம உருவங்கள் விளம்பரங்கள் மற்றும் அரசாங்க விதிகளை பறைசாற்றிகொண்டிருந்தன. பல வடிவுகளில் மற்றும் பறக்கும் அளவுகளில் வாகனங்கள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. ஓட்டுனர் அதற்கிடையில் லாவகமாக வளைத்து ஓட்டினான்.
"ரீவா"
"என்ன அப்பா "
"மகியை நன்றாக பார்த்துகொள். அவள் விரும்பும் படிப்பு எந்த கோளில் இருந்தாலும் சேர்த்து விடு. நீயும் இந்த வேலை விட்டு வேறு கோள்களில் ஏதும் கிடைகிறதா என்று பார்"
"நல்லது "
"அரசாங்க திருமண பதிவில் உன் எண் முதல் 100குள் வந்து விட்டது.. கூடிய விரைவில் அழைப்பு வரும். உனக்கு ஒதுக்கப்படும் பெண்ணை திருமணம் செய்து கொள் "
"சரி .. செய்து கொள்கிறேன்"
" நீரோ விற்கு தினமும் மின்னூட்டம் ஏற்ற வேண்டும். மறந்து விடாதே "
"கண்டிப்பாக " என்றான் ரீவா .
லேசான குலுங்கலுடன் ஊர்தி அந்த கருப்பு நிற கட்டிடத்தின் முன் நின்று .. அதன் அகன்ற வாயிலில் தன் கதவுகளை பொருத்தி கொண்டது ..அதன் முகப்பில் ஒளிரிய பிம்பங்களால் அரசாங்க கட்டிட எண் 887 என பிரும்மாண்டமாக மின்னியது.
"வந்து விட்டது " என்றான் ஓட்டுனர்.
ரீவா தன் அடையாள மின்னட்டையை அவன் நீட்டிய கருவியில் தேய்த்து பயணத்திற்கு பணம் செலுத்தினான். கதவுகள் பிளக்க, பின் இருவரும் இறங்கி அந்த கட்டிட வாயிலை நோக்கி நடந்தனர். மிக பெரிய கதவு அவர்களை எதிர்கொண்டது. அதன் முன் இரு சிப்பந்திகள் அரசாங்க உடையான வெளிர் பச்சை சீருடை அணிந்து நின்றனர். இருவரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு .. இருவரின் உடல்களில் அகச்சிவப்பு கருவியால் சோதனை நடத்தினர். பின் ஒரு விசையை இழுத்தவுடன் அந்த கதவு திறந்துகொண்டது. "போகலாம் " என்றான் ஒருவன்.
உள்ளே ... நீண்ட வெண் கற்களால் பதித்த நடைபாதை .. அதன் முடிவில் ஒரு அகலமான மேஜை .. அதன் மேல் ஒரு கணினி மற்றும் அருகில் ஒரு கன்னி..
இருவரும் அதை நோக்கி நடந்தனர்.
அந்த பெண் எழுந்து நிற்க, கழுத்தில் வெண் தங்க மாலை மின்னியது
" வலிக்குமோ " பொதுவாக கேட்டார் தந்தை.
ரீவா பதில் சொல்லவில்லை.
அந்த பெண்ணை நெருங்கியவுடன். அவள் எழுந்து இயந்திரத்தனமாக ...
"உங்கள் சமுக பிணைய எண் ?" என்றாள்..
"889899768504 -௪௫௬" என்று கூற ....
கணினி தொடு திரையில் வேகமாக அதை பதிவு செய்தாள்.
"உங்கள் பிறந்த நாள் "
" 11-12-2061"
"சரி" என்று அந்த பெண் தன் காதில் பொருத்தியிருந்த அலைபேசியில் எதோ பேசிவிட்டு ..
"அறை எண் 4589 " என்றாள் அதே இயந்திர தன்மை மாறாமல். ..
" தளம் 45"
இருவரும் அங்கிருந்த தானியங்கி உயர்த்தியை நோக்கி சென்று ...உள்ளே ஏறி 4589 ஐ அழுத்தினர் ... மின்னல் வேக உயர்த்தி ஆனதால் சில நொடிகளில் அவர்களை 45 எண் தளத்தில் இறக்கியது ...
வெண்ணிற சுவர்கள் இருபுறமும் உயர்ந்து நிற்க ...இடுப்பு உயர இயந்திர சிப்பந்திகள் அங்கும் இங்கும் சுற்றிகொண்டிருந்தன .... அவற்றில் ஒன்றை நிறுத்தி "4589 அறை " என்று கேட்டான் ரீவா. தன் இரும்பு கரத்தால் ஒரு அறையை நோக்கி காட்டியது அந்த சதுர வடிவ இயந்திர சிப்பந்தி.
தந்தையும் ரீவாவும் அந்த அறையை அடைந்தனர். தானியங்கி கதவுகள் திறந்து கொள்ள. .. உள்ளே ..
இரு வெள்ளை உடை அணிந்த மனிதர்கள் அவர்களை "வாருங்கள் " என கூறினார்.
"இவர்தான் பிரஜையா?"
"ஆமாம் " என்றார் தந்தை.
"முன்னே வாருங்கள் " என சொல்லி அவரை அழைத்து சென்று ஒரு சிறிய மேடை மீது ஏற்றி. .. ஒரு அகச்சிவப்பு கோலினால் உடலை அளந்தனர்.
"மருத்துவ பரிசோதனை யாவும் முடிந்து விட்டதல்லவா "
"நேற்றே முடிந்து . .. அரசாங்க தகவல் தளத்தில் ஏற்றப்பட்டுவிட்டன " என்றார் தந்தை.
"நல்லது.. அப்பொழுது நாம் செல்ல வேண்டியதுதான் பாக்கி " என்றான் அவன் ...
"சரி ஒரு நிமிடம் " என்று ரீவா நோக்கி வந்த தந்தை..
அவனை ஒரு நிமிடம் கட்டி பிடித்து விட்டு .. "வருகிறேன் ரீவா.. "
"சரி அப்பா... " என்ற ரீவா வின் கண்களில் நீர் தளும்பியது .
கூட வந்த இரு நபர்களும் தந்தையின் கையை பிடித்து அழைத்து சென்றனர்.. ..சில படிகளில் ஏற, மற்றொரு மூடப்பட்ட அறை இருந்தது அறை இருந்தது.. உள்ளே சென்று மூவரும் மறைந்தனர்.. தந்தை திரும்பி கை அசைத்தார் .. கதவுகள் மூடி கொள்ள.......
ரீவா அருகில் இருந்த மெத்திருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.
பல நிமிடங்கள் உருண்ட பின்பு..
அந்த அறை கதவுகள் திறந்து கொள்ள..
ரீவா எழுந்து நின்றான்.
அந்த இரு நபர்களும் ரீவாவை நோக்கி வந்தனர். ஒருவன் கையில் கருநீல நிறத்தில் பளிங்கினால் ஆன சதுர வடிவ சிறிய பெட்டி இருந்தது .... அதில் தந்தை முகம் பொறிக்கப்பட்டு கீழே 889899768504 -௪௫௬ எண் பொறிக்கப்பட்டு இருந்தது.
"இந்தாருங்கள், கீழே வரவேற்பில் கையொப்பம் பதித்து விட்டு செல்லுங்கள் " என்ற சிப்பந்தி அதை ரீவாவிடம் நீட்டினான்..
"சரி " என்ற ரீவா அதை நடுங்கும் கைகளுடன் வாங்கி கொண்டான்.
உயர்த்தியில் கீழே இறங்கி கையை தொடு திரையில் பதித்து விட்டு மெதுவாக திரும்பி நடந்த ரீவாவின் கண்கள் கட்டிடத்தின் உச்சியில் ஒளிரியம் ஒளியில் ஓடிகொண்டிருந்த அந்த எழுத்துக்களை தன்னிச்சையாக வாசித்தன...
" 2095 உயிர் நீட்பு சட்டம் : அரசாங்க பிரஜைகள் 50 வயதுக்கு மேல் நீடிக்க அனுமதி இல்லை. .. உயிர் வாழும் தகுதி இழக்க பெறுவர்"
தந்தையின் சாம்பலுடன் இயந்திர வாழ்க்கையை நோக்கி திரும்பினான் ரீவா.
=========================== முடிவு? +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Glossary
முழுமைப் படிம Hologram
நிகழ் பட video
நீர்ம படிக ஒளிக்காட்சி LCD
ஊடொளி laser
மின்னூட்டம் charge
ஒளிரியம் neon
அகச்சிவப்பு infrared
சமுக பிணைய social network
உயர்த்தி elevator/lift
வெண் தங்கம் platinum
தகவல் தளம் database
மெத்திருக்கை sofa
கொள்ளடக்க தகடுகள் memory disks
எண்பிட்டு byte
==========================================================
Subscribe to:
Posts (Atom)






